
அமாவாசை தினத்தில் முன்னோர்களின் வழிபாடு என்பது இந்து கலாச்சாரத்தில், குறிப்பாக தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் பிரபலம். இந்த தினத்தில் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது காலம் காலமாக தமிழ் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வீடு திரும்பிய பின்னர் முன்னோர்களின் புகைப்படத்தை வைத்து படையலிட்டு, வழிபாடு முடித்த பின்னர் அந்த படையலின் சிறு பகுதியை காகத்திற்கு படைப்பது வழக்கம். முன்னோர்கள் காகங்களின் வடிவங்களாக வந்து அந்த உணவை எடுத்தால் அவர்களது ஆசி நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆனால் மாறிவிட்ட வாழ்க்கை முறை காரணமாக காகங்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது.
நாம் படைக்கும் உணவை காகங்கள் வந்து ஒரு வாயாவது எடுத்து விடாதா என்று ஏங்குபவர்களுக்கு இந்த பதிவு மனநிறைவை தரலாம். காகம் நாம் படைக்கும் உணவை எடுக்காவிட்டால் நாம் முன்னோர்களுக்கு குறை வைத்துவிட்டோமோ? முன்னோர்கள் கோபத்தினால் நாம் படைத்த உணவை எடுக்கவில்லையா? என்று மனம் படைப்பதைக்கும். ஆனால் இங்கு இருக்கும் நிலைமையை வேறாக இருக்கிறது. காகங்கள் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பல நகரங்களிலும் எண்ணிக்கை குறைந்து போய் உள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. காகங்கள் பொதுவாக மரங்களில் கூடுகட்டி வாழும் பறவையாகும். ஆனால் காடுகளை அழித்தல், நகரமயமாதல் ஆகியவற்றின் காரணமாக மரங்கள் வெட்டப்படுவது காகங்களின் வாழ்விடங்களை இழக்க செய்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கான்கிரீட் கட்டிடங்கள் அதிகரிப்பதால் காகங்கள் கூடுகட்டும் இடங்கள் குறைந்து விட்டன. இதன் காரணமாக காகங்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. காகங்கள் பொதுவாக மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் கிடக்கும் குப்பைகள், உணவு கழிவுகள், இறந்த விலங்குகளை உண்ணும் ஒரு பறவையாகும். ஆனால் நகரங்களில் குப்பைகளை முறையாக அகற்றுதல், உணவு கழிவுகளை மூடி வைத்தல் போன்ற சுகாதார நடவடிக்கைகள் அதிகரித்ததால் காகங்களுக்கு கிடைக்கும் உணவு ஆதாரங்கள் பெருமளவு குறைந்து விட்டன. மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகள், ரசாயனம் கலந்த உணவுப் பொருட்களை உண்பது என்பது காகங்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பிளாஸ்டிக் பைகளில் வீசப்படும் உணவுகளை உண்டு பல காகங்கள் இறந்தும் போகின்றன.
புறாக்கள் போன்ற சில பறவை இனங்களின் எண்ணிக்கை நகரங்களில் அதிகரித்துள்ளது. இது காகங்களுடன் உணவு மற்றும் வாழ்விடத்திற்காக போட்டியிடுகின்றன. புறாக்கள் உணவு ஆதாரங்களை எளிதில் கண்டறிந்து விரைவாக பெருகும் தன்மை கொண்டவை. ஆனால் காகங்கள் மனிதர்களையே பெருமளவு சார்ந்து இருக்கின்றன. மனிதர்கள் தூக்கி வீசப்படும் உணவுகளை இவை சார்ந்து இருக்கின்றன. சில நேரங்களில் நகரங்களில் பரவும் நோய்கள் அல்லது நச்சுப் பொருட்கள் காகங்களின் இறப்பிற்கு காரணமாகின்றன. சில இடங்களில் மர்மமான முறையில் காகங்கள் இறந்து கிடப்பதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன. ஆனால் அதற்கான சரியான காரணம் எப்போதும் தெளிவாக அறிவிக்கப்படுவதில்லை. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளும் பறவை இனங்களின் அழிவுக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.
இந்த கோபுரங்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த கதிர்வீச்சுகள் பறவையின் இனப்பெருக்க மற்றும் வழி செலுத்தல் திறன்களை பாதிக்கின்றன. இது காகங்களின் எண்ணிக்கை குறைவிற்கு முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது. இருப்பினும் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. முந்தைய காலத்தில் வீடுகளில் மிச்சமான உணவுகளை காகங்களுக்கு வைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்கால வாழ்க்கை முறையில் இந்த பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. காகங்கள் உணவில்லாமல் பிற இடங்களை தேடிச் செல்வது நகரங்களில் காகங்களில் எண்ணிக்கை குறைவதற்கு காரணமாக இருக்கலாம். மரங்கள் வெட்டப்பட்டது, தண்ணீர்கள் கழிவுகளாக மாறிப்போனது போன்ற சூழலியல் காரணங்கள் காகங்கள் என்னும் ஒரு அற்புதப் பறவையை மனிதர்கள் இருந்து விலக்கி விட்டது.
பசுமையான சூழலை உருவாக்குவதற்கு தன் பங்கை தந்த காகங்கள் தற்போது காணாமலேயே போய்விட்டது. அமாவாசை படையலுக்கும் காக்கைகள் அகப்படுவது கிடையாது. சுற்றுச்சூழல் சமநிலையை பேணுவதில் முக்கிய பங்கு வகித்த காகங்கள் கழிவுப்பொருட்களை அகற்றி நகரங்களை சுத்தமாக வைத்திருக்க உதவின. ஆனால் அத்தகைய காகங்கள் மனிதர்களை விட்டு விலகி நீண்ட தூரம் சென்று விட்டன. இனி அவற்றின் கரைதல் யாரின் காதுகளுக்கும் கேட்கப் போவதில்லை.