
தமிழ் மக்களிடையே ஆடி மாதம் என்பது புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என அழைக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் கோயிலில் விசேஷங்களும், ஊர்களில் திருவிழாக்களும் நடக்கும். தமிழ் மாதங்களில் முக்கிய மாதமாக கருதப்படும் ஆடியில் குறிப்பாக கிராமங்களில் தயாரிக்கப்படும் பாரம்பரியமான ஆரோக்கியமான பானமாகும். ஆடி முதல் தினத்தில் தயாரிக்கப்படும் இந்த பானம் உடலுக்கு குளிர்ச்சியையும், பலத்தையும் தரும் என நம்பப்படுகிறது. இந்த பாலை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கால் கப் தண்ணீர் சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும் வரை கிளற வேண்டும். அடுப்பை அணைத்து வடிகட்டி கல் மண் போன்றவற்றை நீக்கி வெல்லப்பாகை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் நன்கு காய்ச்ச வேண்டும். பால் பொங்கி வரும் பொழுது தீயை குறைத்து அடி பிடிக்காமல் கிளற வேண்டும்.
பால் நன்றாக காய்ந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு வடிகட்டி வைத்துள்ள வெல்லப்பாகு அல்லது கருப்பட்டி பாகை சேர்க்க வேண்டும். சிறிது சூடு தணிந்ததும் தேங்காய் பாலையும் பாலுடன் சேர்க்க வேண்டும். அதிக சூட்டில் சேர்த்தால் தேங்காய் பால் திரிந்து விடுவதற்கு வாய்ப்பு உண்டு. இதனுடன் சுக்குத்தூள், மஞ்சள் தூள், ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். (வெல்லப்பாகு மற்றும் தேங்காய் பால் இரண்டையும் அடுப்பை அணைத்துவிட்டு, பால் சிறிது சூடு தணிந்தவுடன் சேர்ப்பது நல்லது). இந்தக் கலவையுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் சேர்க்கவும். தற்போது சுவையான ஆடி பால் ரெடி. இதை சூடாகவும் பருகலாம் அல்லது குளிர வைத்தும் பருகலாம். ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று இறைவனுக்கு படைத்துவிட்டு பின்னர் அனைவரும் பருகலாம்.
தேங்காய் துருவல், வறுத்த பச்சரிசி, பாசிப்பருப்பு சேர்த்து நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். சக்கையை தூக்கி எறியாமல் மீண்டும் ஒருமுறை நீர் விட்டு இரண்டாவது முறை பால் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து பாலையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை நீர் விட்டு பாகு காய்ச்சிக் கொள்ள வேண்டும். வெல்லம் கரைந்ததும் தேங்காய் பாலை ஊற்றி ஏலக்காய் தூள் சேர்த்து இறக்க வேண்டும். இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றை சேர்த்து பருகலாம். இந்த முறையிலும் ஆடி பால் ரெசிபியை தயாரிக்கலாம்.
தமிழகத்தின் பெரும்பாலான கிராமப்புறங்களில் ஆடியின் முதல் தினத்தில் இந்த பாலை செய்து இறைவனுக்கு படைத்து விட்டு புதிதாக திருமணமான ஜோடிகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்த ரெசிபியை நீங்களும் ஒருமுறை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.