இந்த பண்டிகை நாட்களில், துர்க்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவி ஆகிய மூன்று பெண் தெய்வங்களையும் மக்கள் வழிபடுகின்றனர். இந்த பண்டிகை நேரத்தில், கலை நிகழ்சிகள், குறிப்பாக பாரம்பரிய கலைகள், இசை என்று ஒவ்வொரு நாளும், குழந்தைகளும், பெரியவர்களும், உற்சாகத்தோடு ஈடுபட்டு கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு நாளும் இந்த பூஜையை பாடல்களோடும், சிறப்பு பாசுரங்களுடனும் தொடங்குகின்றனர்.
தமிழ்நாட்டில் கொலு வைப்பது பாரம்பரியமாக ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக கருதப்படுகின்றது. இந்த கொலு மனிதர்களின் வாழ்க்கை தத்துவத்தையும், இயற்கையின் பரிணாமத்தையும், மக்களுக்கு உணர்த்தும் வகையில் அமைக்கப்படும். குறிப்பாக இதில் ஆதி முதல், இன்று வரை இந்த உலகில் தோன்றியுள்ள உயிர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பல வகையான பறவைகள், செடி, மரங்கள், விலங்குகள், என்று ஒவ்வொரு படிகளிலும் அலங்கரிக்கப்படும். பிறகு, மக்களும், சித்தர்களும், தேவர்களும், மேல் படிகளில் அவரவர் உயர்ந்த நிலைக்கேற்ப வைக்கப்படுகின்றனர். இறுதியாக, உயரத்தில் இருக்கும் படியில், கலசமும், கடவுளின் சிலைகளும் வைக்கப்படும். இப்படி கொலு படிக்கட்டுகளில் கூட சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்னும் சிலர் வசதிகேற்ப, இந்த கொலு படிகளுக்கு அருகில் ஒரு கிராமம் போன்ற அமைப்பும், வயல் வெளியும், விளையாட்டு மைதானம், நகரம், கோவில் வளாகம், திருமணம், இராமயண நிகழ்வு, மகாபாரதம் என்று அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொம்மைகள் கொண்டு அலங்காரம் செய்து, இந்த நவராத்திரி கொண்டாட்டத்தை சுவாரசியப்படுத்துவார்கள். இதையெல்லாம் பார்க்கவே சில கூட்டம் இருக்கும். அதனாலே கொலுவீடு எப்போதும் களை கட்டி இருக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவருமே கொண்டாட்டத்தில் இருப்பார்கள். வருபவர்களை மகிழ்விக்கும் விதமாக பரிசுகளும் உண்டு.
பாம்பு புற்றில் பால் ஊற்றுவது ஏன் என்ன காரணம்?
தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் இந்த கொலு படிகள் அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு ஒன்பது நாட்களும் கோலாகலமாக கொண்டாடப்படும். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு பலகாரம் செய்து கடவுளுக்கு படைத்து பின் அனைவரும் அதனை பகிர்ந்து உண்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகை, குறிப்பாக தீய சக்திகளிடம் இருந்து, சக்தி வடிவான துர்க்கை அம்மன் அனைவரையும் காத்தருளும் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.
Navartri : நவராத்திரி - ஒவ்வொரு நாளின் சிறப்பு என்ன தெரியுமா?
ஒவ்வொரு நாளும் துர்க்கை அம்மனுக்கு அந்த நாளுக்கு உரிய பெண் தெய்வத்தின் அலங்காரத்தை செய்து வழிபடுகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்தெய்வத்தின் அருளை பெறுவதாக மக்கள் நம்புகின்றனர். இதனால் ஆரோக்கியம், ஆயுள் மற்றும் சகல செல்வங்களோடு அவர்கள் வாழ்க்கை மேம்படும் என்றும் நம்பப்படுகின்றது.