வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதன் காரணமாக ஆந்திராவில் ராயலசீமா, கர்னூல், சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்கச் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மழை நிலவரம், தரிசனம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
இதனையடுத்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து புதன்கிழமை அதாவது அக்டோபர் 16ம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஐபி பிரேக் தரிசன பரிந்துரை கடிதங்களை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் நலன்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Spiritual Tour: ஒரே நாளில் 6 முருகன் கோயில் தரிசனம்! வெளியான சூப்பர் அறிவிப்பு! எந்தெந்த நாட்களில்?
இதனிடையே திருப்பதியில் நேற்று 75,361 பேர் தரிசனம் செய்ததாகவும் 28,850 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியதாக கூறப்பட்டுள்ளது. ரூ.3.91 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.