
உக்கிரமான தோற்றம் கொண்ட கடவுள்களின் உருவங்களை வீட்டில் வைக்கக் கூடாது. எடுத்துக்காட்டாக காளி, நரசிம்மர், மகிஷாசுரமர்த்தினி போன்ற கடவுள்களின் புகைப்படங்கள் வீட்டில் வைப்பது பொருத்தமற்றவையாக இருக்கும். இந்த கடவுள்கள் பொதுவாக அழிவு, கோபம் அல்லது சக்தி வாய்ந்த ஆற்றலை குறிக்கின்றன. இவை வீட்டில் அமைதி மற்றும் நேர்மறை ஆற்றல் தருவதற்குப் பதிலாக பயம் அல்லது அச்சத்தை உருவாக்கலாம்.
வீடு என்பது அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்த இடமாக இருக்க வேண்டும். உக்கிரமான உருவங்கள் இந்த அமைதியை பாதிக்கலாம். இத்தகைய உருவங்கள் பொதுவாக கோயில்கள் அல்லது பிரத்யேகமான ஆன்மீக இடங்களில் வைத்து மட்டுமே பூஜிக்கப்பட வேண்டும்.
சிவனின் தாண்டவ உருவமான நடராஜர் சிலையை வீட்டில் வைப்பது தவிர்க்கப்பட வேண்டும். நடராஜர் உருவம் என்பது சிவபெருமானின் அண்ட தாண்டவத்தை குறிக்கிறது. இது படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றின் சுழற்சியை பிரதிபலிக்கிறது. இந்த உருவம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், ஆன்மீக ஆற்றல் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது.
வீட்டில் நடராஜர் சிலை அல்லது புகைப்படங்களை வைக்கும் பொழுது அதற்கு தேவையான பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்யாத நிலை வந்தால் எதிர்மறை விளைவுகள் ஏற்படலாம்.
நடராஜர் உருவம் கலை மற்றும் ஆன்மீகத்தின் அடையாள கருதப்பட்டாலும், இது வீட்டின் அமைதியைப் பாதிக்கலாம். வீட்டில் சிவலிங்கம் அல்லது தியான நிலையில் உள்ள சிவனின் புகைப்படங்களை மட்டுமே வைக்க வேண்டும்.
ராகு, கேது, சனிபகவான் ஆகியோர் நவகிரகங்களில் முக்கியமானவர்கள் என்றாலும் இவர்கள் கடுமையான கர்ம வினைகளையும், சவால்களையும் குறிக்கின்றன. இவர்களின் உருவங்களை வீட்டில் வைப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த கிரகங்களை கோயில்கள் அல்லது நவகிரக ஸ்தலங்களில் மட்டுமே வழிபட வேண்டும். நவகிரகங்களை முறையாக வழிபட வேண்டும் என்றால், அனைத்து கிரகங்களையும் சேர்த்து ஒரு சிறிய யந்திரம் செய்து அதில் வழங்கலாம்.
கடவுளின் உருவங்கள் துக்கம், அழுகை அல்லது துயரத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது. உதாரணமாக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து அல்லது துக்கத்தில் இருக்கும் அன்னை மரியின் உருவங்கள் வீட்டில் வைப்பதற்கு பொருத்தமற்றவையாகும். இத்தகைய உருவங்கள் வீட்டில் எதிர்மறை உணர்வுகளை தூண்டலாம் அல்லது மன அமைதியை பாதிக்கலாம். இத்தகைய உருவங்களுக்கு பதிலாக இயேசு கிறிஸ்துவின் அமைதியான வடிவம், ஆசி வழங்கும் தோற்றம் அல்லது அன்னை மரியின் அன்பான உருவங்களை வைத்து வழிபடலாம்.
மகாபாரதம், ராமாயணம் போன்ற புராணங்களில் உள்ள போர்க் காட்சிகள் அல்லது ராமர் ராவணனை வதம் செய்வது அல்லது கடவுள்கள் அரக்கர்களை அழிக்கும் காட்சிகளை வீட்டில் வைப்பது உகந்ததல்ல. இது வன்முறையையும், மோதலையும் குறிக்கின்றன. வாஸ்து சாஸ்திரத்தின் படி இத்தகைய காட்சிகளை வீட்டில் வைப்பது என்பது குடும்ப உறுப்பினர்களிடையே அடிக்கடி சண்டை, சச்சரவு, மனகசப்பு அல்லது மன அழுத்தத்தை உருவாக்கலாம். இதற்கு மாற்று வழியாக ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோரின் அமைதியான குடும்ப உருவங்களை வைக்கலாம்.
உடைந்த, கிழிந்த அல்லது மங்கிய கடவுள் புகைப்படங்களை வீட்டில் வைப்பது தவறானது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இது மரியாதை குறைவதாகவும், எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாகவும் கருதப்படுகிறது. கடவுள் உருவங்கள் எப்போதும் புனிதமாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். உடைந்த புகைப்படங்கள், மங்கிய புகைப்படங்களை மாற்றி புதிய தெளிவான புகைப்படங்களை வைக்கவும். அதை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும்.
கடவுள் புகைப்படங்களை வைப்பதற்கு வடகிழக்கு திசையான ஈசான்ய மூலை மிகவும் உகந்தது. ஏனெனில் ஈசான்ய மூலை ஆற்றலை ஈர்க்கும் இடமாகும். அல்லது கடவுள் புகைப்படங்களை பூஜை அறை மற்றும் கடவுள் புகைப்படங்களுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். படுக்கையறை, குளியலறை, சமையலறை ஆகிய இடங்களில் வைக்கக்கூடாது. நேரடியாக கதவுக்கு எதிரே அல்லது கழிவறைக்கு அருகில் வைக்கக்கூடாது. கடவுள் புகைப்படங்களை தவறாமல் சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, விளக்கேற்றி, பூஜை செய்து புனிதமாக வைத்திருக்கவும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் கடவுள் புகைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பொழுது அவை மகிழ்ச்சி, நேர்மறை ஆற்றல்களை பரப்பும் விதமாக இருக்க வேண்டும். உக்கிரமான, அழிவைக் குறிக்கும் அல்லது துக்கத்தை வெளிப்படுத்தும் உருவங்களை தவிர்ப்பது நல்லது. கடவுள் புகைப்படங்களை சுத்தமாகவும், மரியாதையுடனும் பராமரிப்பது முக்கியம். இவற்றை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் ஆன்மீகமான மற்றும் நேர்மறையான சூழல் உருவாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)