
சாணக்கியர் இந்திய வரலாற்றில் தத்துவஞானியாகவும், ராஜதந்திரியாகவும், பொருளாதார நிபுணராகவும் அறியப்படுகிறார். அவர் தனது சாணக்கிய நீதி என்கிற நூலில் மனித உறவுகள், வாழ்க்கை நடைமுறைகள், வெற்றிக்கான நெறிமுறைகளை விளக்கி இருக்கிறார். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஒருவர் யாரை தவிர்க்க வேண்டும் என்பதில் சாணக்கியர் தெளிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
குறிப்பாக பெண்கள் மகிழ்ச்சியான அமைதியான வாழ்க்கையை உறுதிப்படுத்த, தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் பொழுது கவனம் செலுத்த வேண்டிய குணங்கள் பற்றி கூறுகிறார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியர் ஆணவம் மற்றும் தற்பெருமை பேசும் ஆண்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். இத்தகைய ஆண்கள் தங்களைப் பற்றி அதிகம் பேசுவார்கள். மற்றவர்களை மதிக்க மாட்டார்கள். துணையின் உணர்வுகளையும், கருத்துகளையும் புறக்கணித்து தங்கள் கருத்தே உயர்ந்தது என்று வாதிடுவார்கள். அனுபவம் கொண்ட ஆண்களுடன் வாழும் பெண்கள் எப்போதும் மரியாதையின்மையும், மனச்சோர்வையும் அனுபவிப்பார்கள்.
இதனால் ஆரோக்கியமான உரையாடலோ அல்லது சமமான உறவோ சாத்தியம் இல்லை. ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்தையும், முடிவெடுக்கும் உரிமையையும் இவர்கள் அடக்க முயற்சிப்பார்கள். எனவே இத்தகைய ஆண்களிடமிருந்து பெண்கள் விலகி இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
நம்பிக்கைதான் எந்த உறவுக்கும் ஆதாரம். ஒரு ஆண் தன்னுடைய துணையின் தனிப்பட்ட விஷயங்கள், குடும்ப ரகசியங்கள் அல்லது அவளுடைய உணர்வுகளைப் பற்றி மற்றவர்களுடன் வெளிப்படையாக பேசினால் அது உறவின் அடித்தளத்தையே அசைத்து விடும். ரகசியம் காக்க தெரியாத ஆண்கள் தங்கள் துணையின் நம்பிக்கைக்கு துரோகம் செய்வார்கள். இவர்கள் பொது இடங்களில் துணையை இழிவுபடுத்துவார்கள் அல்லது கிசுகிசுகளுக்கு வழிவகுப்பார்கள்.
சாணக்கியரின் அறிவுரைப்படி இத்தகைய ஆண்கள் மீது பெண் வைக்கும் அடிப்படை நம்பிக்கை தகர்ந்து போகலாம். இது பாதுகாப்பற்ற கவலையான சூழலை உருவாக்கும். அந்தப் பெண் தனிமையாகவும், பயத்துடனே வாழ வழிவகுக்கும். எனவே இத்தகைய ஆண்களை பெண்கள் தவிர்த்து விட வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
சாணக்கியர் நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். எந்த ஒரு உறவிலும் குறிப்பாக திருமண உறவில் நேர்மை இல்லாவிட்டால் அது நீண்ட நாட்கள் நிலைக்காது. பொய் சொல்வது, ஏமாற்றுவது, மற்றவர்களை தவறாக நடத்துவது போன்ற குணங்களை கொண்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் விலகி இருக்க வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். அவர்கள் தங்கள் தேவைக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். வாழ்க்கைத் துணை அல்லது குடும்பத்தை ஏமாற்ற தயங்க மாட்டார்கள்.
நேர்மையற்றவர்களை நம்பி வாழும் பெண்கள் எதிர்காலத்தில் பெரிய சிக்கல்களையும், துரோகத்தையும் சந்திக்க நேரிடும். இத்தகைய ஆண்களால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. அவர்களின் தவறான நடத்தையால் பெண்களும் சமூகத்தில் அவமானப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
ஒருவனுக்கு தன் துணையிடம் உண்மையாக இருப்பது அடிப்படை கடமை ஆகும். பிற பெண்களிடம் ஈர்க்கப்பட்டு தன் துணையை அலட்சியம் செய்யும் ஆண்கள் ஒரு உறவில் மகிழ்ச்சியை தர மாட்டார்கள். அவர்கள் திருமணத்தின் புனிதத்தையும் மதிக்காதவர்கள். விசுவாசமற்ற ஆண்கள் தனது வாழ்க்கைத் துணையின் நம்பிக்கையை அழித்து, குடும்பத்தில் நிலையற்ற தன்மையை கொண்டு வருவார்கள்.
இது குடும்பத்தின் மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கு மிகுந்த கேடு விளைவிக்கும். எனவே பிற பெண்களால் ஈர்க்கப்படும் ஆண்களை பெண்கள் அறவே ஒதுக்கி விட வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
சாணக்கியர் எந்த ஒரு ஆண்மகன் பெண்களை மதித்து நடக்கத் தெரியாதவனோ, அவனை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இது மனைவிக்கு மட்டுமல்ல, தாய், சகோதரி அல்லது அனைத்து பெண்களுக்கும் பொருந்தும். பெண்களை மதிக்கத் தெரியாத ஆண்கள் ஆணாதிக்கம் மனப்பான்மை கொண்டவர்களாகவும், முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர்களாகவும் விளங்குகின்றனர். அவர்களை பெண்ணை மதிக்க தெரியாதவர்கள், சமமாக கருத மாட்டார்கள்.
இத்தகைய ஆண்களுக்கு துணையாக இருக்கும் பெண்கள் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள். இத்தகைய ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் பேசவோ, செயல்படவோ அல்லது முடிவெடுக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு இது பெரும் தடையாக இருக்கும். எனவே இத்தகைய ஆண்களை பெண்கள் தவிர்த்து விட வேண்டும் என சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)