கருவறையில் ஈசனை கண்டால் அவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்து அருளுகிறார். 36 பட்டிகள் உள்ள சதுர வடிவமான ஆவுடையாரில் மல்லிகார்ஜுனேஸ்வர ஸ்வாமி என்ற நாமத்துடன் விளங்குகிறார். இந்த 36 படிகள் சிவகாமத்தின் 36 தத்துவங்களை குறிக்கிறது. கர்பகிரகத்தின் வாயில் அருகே இடது புறம் விநாயக பெருமானும், வலது புறம் முருக பெருமானும் உள்ளார்கள், அப்படியே வெளியே வந்து கோயிலை வலம் வருகையில் வலம்புரி விநாயகர் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார். அதனருகில் இஷ்ட சித்தி சண்முகர் சன்னதி உள்ளது. அவர் ஆறுமுகங்களுடன் மயில்வாகனத்தில் ஐயப்ப சுவாமியை போல் கால்களை மடக்கி அமர்ந்துகொண்டிருக்கிறார். முருகரின் ஒரு பாதம் நாகத்தின் தலைமேல் உள்ளது. முருகரின் வாகனமான மயில் தன் அலகால் ஒரு நாகத்தை பிடித்துள்ளது. இந்த தரிசனம் எங்கும் காணக்கிடைக்காத ஒரு அபூர்வ தரிசனம் ஆகும் .