
Diwali 2024: தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா, கயானா, மலேசியா, மொரீசியஸ், மியான்மர், நேபாள், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், சிங்கப்பூர் என்று உலக நாடுகளிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ஒருநாள் மட்டும் கொண்டாடப்படும் திருவிழா அல்ல. இது 5 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த தீபாவளி பண்டிகை அக்டோபர் 29ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2ஆம் தேதி வரையில் 5 நாட்கள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த 5 நாட்களும் ஒவ்வொரு விதமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளின் சிறப்புகளையும், அதனுடைய முக்கியத்துவம் மற்றும் பழக்க வழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
தந்தேராஸ்:
தீபாவளி பண்டிகையின் முதல் திருவிழாவான தந்தேராஸ் அக்டோபர் 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் குறைந்து வரும் சந்திர பகவானின் 13ஆவது நாளில் கொண்டாடப்படும் திருவிழா. தந்தேராஸ் என்றால் மங்களகரமான திருவிழா என்று பொருள். தன் என்றால் செல்வத்தை குறிக்கிறது. தேராஸ் என்றால் 13ஆவது நாளை குறிக்கிறது.
இந்த நாளில் தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த பொருட்களை வாங்கினால் செல்வ செழிப்பு, அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது ஐதீகம். இந்த நாளில் லட்சுமி தேவி மற்றும் தன்வந்திரிக்கு பூஜை செய்து வழிபாடு செய்யலாம். செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. ஆரோக்கியம் மற்றும் ஆயுர்வேதத்தின் அதிபதி தன்வந்திரி.
பாரம்பரிய சடங்குகள்:
வீடுகளை சுத்தம் செய்து வைத்து கொள்ள வேண்டும். ஏனென்றால், தூய்மையாக இருந்தால் தான் லட்சுமி தேவி வீட்டிற்குள் வருவாள். வீடுகளை அலங்கரித்து எண்ணெய் விளக்குகள் ஏற்றி வைத்து மாலையில் லட்சுமி மற்றும் தன்வந்திரிக்கு பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
உணவுகள்:
இந்த நாளில் பாரம்பரிய உணவுகளான லட்டு, பருப்பு போளி மற்றும் கீர் ஆகியவை தயார் செய்யப்பட்டு குடும்பங்களுடன் சேர்ந்து கொண்டாடப்படுகிறது.
நரக சதுர்த்தசி அல்லது சோட்டி தீபாவளி:
அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தில் குறைந்து வரும் நிலவின் 14ஆவது நாளில் நரக சதுர்த்தசி கொண்டாடப்படுகிறது. இது மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. நரகாசுரனை கொன்ற கிஷண பகவானின் கதையை மையமாகக் கொண்டது.
தீபாவளி:
அக்டோபர் 31 ஆம் தேதி வியாழக்கிமை தீபங்களின் திருநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. விளக்குகளின் திருவிழா. புத்தாடை அணிந்து கொண்டு வீடுகளில் விளக்கேற்றி வைத்தும் பட்டாசு வெடித்தும் கொண்டாடப்படுகிறது. இருளை நீக்கி ஒளி என்ற வெளிச்சத்தை வீடு முழுவதும் நிலைத்து இருப்பது போன்று வாழ்க்கையில் தீமை என்ற இருளை நீக்கி நன்மை என்ற அதிர்ஷ்ட வெளிச்சத்தை கொடுக்கும் என்பதை தீபாவளி பண்டிகை குறிக்கிறது.
கோவர்தன பூஜை:
5 நாட்கள் கொண்ட தீபாவளி பண்டிகையின் 4ஆவது நாள் பண்டிகை தான் கோவர்தன பூஜை அல்லது அன்னகூட் (உணவின் மலை) என்று அழைக்கப்படுகிறது. பிருந்தாவன மக்களையும், கால்நடைகளையும் இந்திரனின் சாபத்திலிருந்து பாதுகாக்கவே கோவர்தன என்ற மலையை தூக்கி அவர்களது தங்கும் இடத்தை உருவாக்கி கொடுத்ததை நினைவாக கொண்டாடப்படுகிறது.
மலைகள், காடுகள், இயற்கை ஆகியவற்றிற்கு நன்றி செலுத்தும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதன் பலனாக பருவங்களில் விளையும் காய் கறிகள், அரிசி, பருப்பு வகைகள் ஆகியவற்றை கொண்டு மலைபோல் இருப்பது போன்று உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
பாய் தூஜ்:
5 நாட்கள் தீபாவளி பண்டிகையின் கடைசி திருவிவா பாய் தூஜ். நவம்பர் 2ஆம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. குடும்ப உறவுகளில் அண்ணன் தங்கை உறவின் புனிதத்தை மதிக்கும் பண்டிகை. இது ரக்ஷா பந்தன் உடன் ஒப்பிடப்படுகிறது.
புராணத்தின் படி இந்த நாளில் யமதர்மராஜா தனது சகோதரி யாமியின் வீட்டிற்கு செல்வதையும், அவளது அன்பால் மனம் குளிர்ந்த யமதர்மராஜா, தனது சகோதரி யாமிக்கு இந்த நாளில் ஒவ்வொரு சகோதரனும் நீண்ட ஆயுள் மற்றும் வளமுடன் வாழ்வார்கள் என்ற வரத்தை அளித்தார் என்பதை இந்த பாய் தூஜ் பண்டிகை குறிக்கிறது.
இந்த 5 நாட்கள் பண்டிகையின் மைய கருத்துக்களை பற்றி அறிந்து கொண்டோம். இனி ஒவ்வொரு பண்டிகையின் முக்கியத்துவம், புராணக் கதைகள், பாரம்பரிய உணவுகள் பற்றி தனித்தனி பண்டிகையாக தெளிவாக பார்ப்போம்.