விமலின் கிராமத்து விருந்து டேஸ்டா? வேஸ்டா? வடம் விமர்சனம் இதோ

Published : Mar 06, 2026, 10:43 AM IST

இயக்குநர் கேந்திரன் முனியசாமி இயக்கத்தில், விமல், பால சரவணன், முனீஸ்காந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் 'வடம்' திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.

PREV
15
Vadam Movie Review

படம் தொடங்கிய முதல் சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வந்துவிடுகிறார் இயக்குநர். ஒரு கொலை வழக்கிலிருந்து ஜாமினில் வெளிவரும் விமலை, ஒரு கும்பல் தீர்த்துக்கட்டத் துடிக்கிறது. இது ஒருபுறமிருக்க, விமலைக் கொல்ல ஒரு முதியவர் கூலிப்படையைத் தேடி அலைகிறார். இன்னொரு பக்கம், கூடவே இருந்தபடி ஒரு நபர் விமலுக்குக் குழி பறிக்கிறார். "விமல் அப்படி என்னதான் தப்பு பண்ணார்?" என்ற ஒற்றைக் கேள்விக்கு விடை தேடிப் பயணிக்கிறது திரைக்கதை. இந்தப் பயணத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல... அடுத்தடுத்து விரியும் பல அடுக்கு 'பிளாஷ்பேக்'கள் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.

25
வடம் விமர்சனம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோவாக விமல் களம் இறங்கியிருக்கிறார். முறுக்கு மீசை, கம்பீரமான உடல்மொழி என மஞ்சு விரட்டு வீரராகவும், அடிதடி ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டுகிறார். குறிப்பாக, காளைகளுக்குப் பயிற்சி அளிக்கும் காட்சிகளில் அவரது உழைப்பு தெரிகிறது. சங்கீதா கல்யாண், வழக்கமான 'டூயட்' ஹீரோயினாகத் தெரிந்து, பின் ஒரு கட்டத்தில் கதையின் போக்கைத் தீர்மானிக்கும் முக்கியப் பாத்திரமாகப் பரிணமிக்கிறார்.

35
வடம் படம் எப்படி இருக்கு?

நட்டி நட்ராஜ் & ஆடுகளம் நரேன், அனுபவ நடிப்பால் படத்திற்கு பலம் சேர்க்கிறார்கள். காளைகளின் கௌரவத்திற்காகப் போராடும் வில்லத்தனத்தில் நட்டி மிரட்டுகிறார். பாலசரவணன் & முனீஸ்காந்த், நகைச்சுவைக்காக வந்தாலும், முனீஸ்காந்த் ஒரு கட்டத்தில் சீரியஸான ஆக்ஷனில் இறங்கி ஆச்சரியப்படுத்துகிறார். படத்தின் மிகப்பெரிய பலம் டி. இமானின் பின்னணி இசை. அதிரடி காட்சிகளுக்குத் தனது ட்ரேட்மார்க் இசையால் உயிர் கொடுத்திருக்கிறார். சின்மயி குரலில் ஒலிக்கும் மெலடி பாடல் காதுகளுக்குத் தேனாக உள்ளது.

45
வடம் ரிவ்யூ

மதுரையின் மண்மணம் மாறாத நிலப்பரப்பைத் தனது கேமராவால் அழகாகவும், அதே சமயம் பரபரப்பாகவும் படம் பிடித்திருக்கிறார்கள். மஞ்சு விரட்டு நடக்கும் மைதானத்தின் புழுதி நம் கண்களிலும் படுவது போன்ற தத்ரூபமான படப்பிடிப்பு. ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு சார்ந்த படங்கள் பல வந்திருந்தாலும், 'வட மஞ்சு விரட்டு' எனும் பாரம்பரிய விளையாட்டை மையப்படுத்தி நேட்டிவிட்டி மாறாமல் சொல்லியிருப்பது இந்தப் படத்தின் தனிச்சிறப்பு.

55
பிளஸ் & மைனஸ் என்ன?

ஏற்கனவே பார்த்த சில கிராமத்துக் கதைகளின் சாயல் தெரிந்தாலும், 'வடம்' விளையாட்டைச் சேர்த்தது புதுமை. தொய்வில்லாத திரைக்கதை அமைப்பு, பல அடுக்குகளாக விரியும் பிளாஷ்பேக் உத்தி; மதுரை மக்களின் வாழ்வியலும், காளைகள் மீதான நேசம்; விமலின் ஆக்ஷன் அவதாரம் ஆகியவை பிளஸ் ஆக அமைந்துள்ளன. படத்தின் மைனஸ் என்னவென்றால், பழிவாங்கல் கதை என்பதால் ஆங்காங்கே ரத்தம் மற்றும் வன்முறை தூக்கலாக இருக்கிறது.

பகை, பழிவாங்கல், பாரம்பரிய விளையாட்டு எனப் பல விஷயங்களை விறுவிறுப்பான திரைக்கதையில் கோர்த்திருக்கிறார் இயக்குநர். கிராமத்து ஆக்ஷன் கதைகளை ரசிக்கும் ரசிகர்களுக்கு இந்த 'வடம்' ஒரு பக்காவான விருந்து.

Read more Photos on
click me!

Recommended Stories