
விஜய் ஆண்டனி, தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து வருகிறார். தற்போது, 'நூறு சாமி' என்ற ஒரு புதுமையான கதையம்சத்துடன் கூடிய படத்துடன் வந்துள்ளார். இதில் அவர் நடித்தது மட்டுமல்லாமல், அவரே தயாரிப்பாளராகவும் இருப்பது சிறப்பு. சசி இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் ஆண்டனியுடன் சுவாசிகா விஜய், அஜய் தீஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி, சர்வன்த் ராம் கிரியேஷன்ஸ் பேனர் உடன் இணைந்து தயாரித்துள்ளார். ஜூன் 19, வெள்ளிக்கிழமை வெளியான இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
Engal Thangam Review : கம்பேக் கொடுத்தாரா சமந்தா? எங்கள் தங்கம் விமர்சனம் இதோ
சுவாசிகாவுக்கு, அஜய் தீஷன், சக்தி என இரண்டு மகன்கள். கணவர் சிறு வயதிலேயே இறந்துவிட, தனி ஆளாக நின்று பல கஷ்டங்களுக்கு மத்தியில் அவர்களை வளர்க்கிறார். ஊரில் பலரின் தவறான பார்வைக்கு ஆளாகிறார். இந்நிலையில், அவருக்கு மறுமணம் செய்துகொள்ளும் ஆசை வருகிறது. இதை பள்ளி ஆசிரியர் மூலம் மூத்த மகனிடம் சொல்ல, அவன் கோபப்பட்டு மறுக்கிறான். காலங்கள் உருண்டோடுகின்றன. மகன்கள் வளர்ந்து வேலைக்குச் செல்கிறார்கள். இப்போது, அஜய் தீஷனுக்கே அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. ஆனால், அம்மா திருமணம் செய்துகொண்டால் தான், தானும் காவ்யா அனிலை திருமணம் செய்துகொள்வேன் எனப் பிடிவாதம் பிடிக்கிறான். அம்மா மறுமணத்திற்கு சம்மதித்தாரா? விஜய் ஆண்டனி கதாபாத்திரம் என்ன செய்தது? என்பதே மீதிக்கதை.
மனைவி இழந்த ஆண்கள் மறுமணம் செய்வது சகஜம். ஆனால், கணவனை இழந்த ஒரு பெண், அதுவும் 40 வயதிற்கு மேல் மறுமணம் செய்ய நினைத்தால் இந்த சமூகம் எப்படிப் பார்க்கும்? என்ற கேள்வியை இந்தப் படம் எழுப்புகிறது. நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த அருமையான கருத்தை படமாக்கிய விஜய் ஆண்டனியை பாராட்டலாம். படத்தின் ஆரம்பம், ஒரு தாயின் போராட்டத்தை மெதுவாக காட்டுகிறது. இரண்டாம் பாதியில் விஜய் ஆண்டனியின் என்ட்ரிக்குப் பிறகு கதை சூடுபிடிக்கிறது. காதல், காமெடி, எமோஷன் என அனைத்தும் கலந்து, கடைசி அரை மணி நேரம் விறுவிறுப்பாக நகர்கிறது. கதைக்கரு சிறப்பாக இருந்தாலும், முதல் பாதியில் சில இடங்களில் எமோஷன்ஸ் மற்றும் அழுத்தமான காட்சிகள் குறைந்திருப்பது ஒரு குறை. கமர்ஷியல் அம்சங்கள் குறைவாக இருந்தாலும், சொல்ல வந்த கருத்து பாராட்டுக்குரியது.
வாசுகி கதாபாத்திரத்தில் சுவாசிகா விஜய் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். மனதிற்குள் வலியை வைத்துக்கொண்டு, வெளியே சிரிக்கும் ஒரு பெண்ணாக வாழ்ந்திருக்கிறார். இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ அவர்தான். பாஸ்கர் வேடத்தில் அஜய் தீஷன் மிகவும் பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். விவேக் வேடத்தில் சக்தியின் நடிப்பும் கச்சிதம். இரண்டாம் பாதியில் வரும் விஜய் ஆண்டனி, வரும் காட்சிகளில் எல்லாம் ஸ்கோர் செய்கிறார். மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.
பாலாஜி ஸ்ரீராமின் இசை படத்திற்கு ஒரு பெரிய பிளஸ். பாடல்களும், பின்னணி இசையும் புதுமையாகவும், ஈர்க்கும்படியும் உள்ளன. எஸ்.பி. தர்ஷன் கிர்லோஷின் கேமரா வொர்க், படத்தின் உணர்வை அழகாக பிரதிபலிக்கிறது. எடிட்டிங்கும் நேர்த்தியாக உள்ளது. இயக்குனர் சசி, ஒரு முக்கியமான மற்றும் சென்சிடிவான கதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். கமர்ஷியல் விஷயங்கள் குறைவாக இருப்பது ஒரு மைனஸ் ஆக இருந்தாலும், ஒரு நல்ல முயற்சியாக இந்தப் படம் தனித்து நிற்கிறது. மொத்தத்தில், 'அம்மாவுக்கு மறுமணம்' என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், ஒரு பாராட்டத்தக்க முயற்சி.