
குடும்ப உறவுகள், காமெடி, மர்மம், குற்ற விசாரணை என பல அம்சங்களை ஒன்றாகக் கலந்து இயக்குநர் பாண்டிராஜ் உருவாக்கியிருக்கும் படம் பரிமளா அன்ட் கோ. ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், யோகிபாபு, மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜார்ஜ் சி வில்லியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். Foxn இப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தை மையமாக வைத்து கதை நகர்கிறது.
Peddi Review : ராம்சரணின் பெத்தி படம் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
கணவன்-மனைவி இடையேயான அன்றாட சண்டைகள், அக்கா-தங்கை போட்டிகள், வாடகை வீட்டில் வாழும் குடும்பத்தின் சிறுசிறு பிரச்சினைகள் என முதல் பாதி மிகவும் பரிச்சயமான சூழலில் தொடங்குகிறது. இந்த குடும்பத்தில் இளைய மகளை தொடர்ந்து தொந்தரவு செய்யும் உள்ளூர் ரவுடியின் செயல்கள் ஒரு கட்டத்தில் பெரும் பிரச்சினையாக மாறுகின்றன.
அந்த ரவுடி திடீரென மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அதைத் தொடர்ந்து விசாரணைக்காக வரும் போலீஸ் அதிகாரி, குடும்ப உறுப்பினர்கள் மீது படிப்படியாக சந்தேகம் கொள்கிறார். அதே நேரத்தில் குடும்பத்தினரும் தங்களுக்குள் யார் இந்தக் கொலையை செய்திருக்கலாம் என்ற குழப்பத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். இறுதியில் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜெயராம் மற்றும் ஊர்வசி இருவரும் அனுபவம் மிக்க நடிகர்களாக தங்களது கதாபாத்திரங்களை இயல்பாக சுமக்கிறார்கள். குறிப்பாக குடும்பத் தலைவராக ஜெயராமும், எப்போதும் பதற்றத்துடன் இருக்கும் தாயாக ஊர்வசியும் பல இடங்களில் ரசிக்க வைக்கிறார்கள். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா இருவரும் கதைக்கு தேவையான நடிப்பை வழங்குகின்றனர். மிஷ்கின் வழக்கம்போல் தனக்கே உரிய பாணியில் கவனத்தை ஈர்க்கிறார்.
படத்தின் பலம் அதன் வசனங்களில் இருக்கிறது. சில இடங்களில் எதிர்பாராத நகைச்சுவை வசனங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் நுணுக்கமான மனநிலைகளையும் படம் சுவாரஸ்யமாக பதிவு செய்கிறது. ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அழகூட்ட, இசையமைப்பாளர் Foxn பின்னணி இசையில் துடிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஆனால் படம் முழுமையாக ஈர்க்கிறதா என்றால் அதற்கு பதில் கலவையானதே. மர்மக் கதையாக தொடங்கிய திரைக்கதை, பல துணைக் கதைகளால் அடிக்கடி திசை மாறுகிறது. சில காட்சிகள் தேவையற்ற நீளத்தை ஏற்படுத்துவதால் கதையின் வேகம் பாதிக்கப்படுகிறது. நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்ட சில தருணங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை.
மேலும் சில கதாபாத்திரங்களின் நடவடிக்கைகள் மற்றும் திருப்பங்களில் நம்பகத்தன்மை குறைவாக இருப்பது படத்தின் தாக்கத்தை குறைக்கிறது. குறிப்பாக விசாரணை தொடர்பான சில சம்பவங்கள் தர்க்க ரீதியாக கேள்விகளை எழுப்புகின்றன. அதேபோல் சில காட்சிகள் குடும்பப் பார்வையாளர்களுக்கு முழுமையாக பொருந்துமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றன.
இருப்பினும் இறுதிக் கட்டத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களைச் சார்ந்த ஒரு முக்கியமான மெசேஜை முன்வைத்து படம் முடிவடைவது பாராட்டத்தக்க அம்சமாக மாறுகிறது. மொத்தத்தில், பரிமளா அன்ட் கோ ஒரு வித்தியாசமான முயற்சி. சில இடங்களில் சிரிக்க வைக்கிறது, சில இடங்களில் தடுமாறுகிறது. மிகச் சிறந்த அனுபவமாக இல்லாவிட்டாலும், முழுமையாக ஏமாற்றவும் செய்யாத ஒரு சராசரி பொழுதுபோக்கு திரைப்படம்.