Blast Movie Review : ஆக்ஷன் கிங் அர்ஜுன், நடிகைகள் அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பிளாஸ்ட் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஆக்ஷன் கதைகளுக்கு பெயர் பெற்ற நடிகர் அர்ஜுன் நடித்துள்ள “பிளாஸ்ட்” திரைப்படம், குடும்ப உணர்வுகளும் பெண்கள் முன்னேற்ற சிந்தனைகளும் கலந்த அதிரடி படமாக உருவாகியுள்ளது. கராத்தே பயிற்சியாளராக வரும் அர்ஜுன், தனது மனைவி அபிராமி மற்றும் மகள் ப்ரீத்தி முகுந்தனுக்கும் தற்காப்புக் கலைகளை கற்றுக் கொடுத்து, அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வளர்க்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் அதிகாரமும் பணமும் கையில் வைத்திருக்கும் ஆபத்தானவர்களுடன் மோத வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அந்த மோதல் எங்கு சென்று முடிகிறது என்பதையே படம் பரபரப்பாகச் சொல்கிறது.
24
பிளாஸ்ட் விமர்சனம்
அர்ஜுனின் திரைப்பட அனுபவம் முழுவதும் இந்தக் கதாபாத்திரத்தில் வெளிப்படுகிறது. கராத்தே மாஸ்டராக அவர் காட்டும் உடல் மொழி, சண்டைக் காட்சிகளில் இருக்கும் வேகம், பிரச்சனைகளில் சிக்கியபோதும் அதைக் கையாளும் அமைதி ஆகியவை கதைக்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் அவர் வழக்கம்போல ரசிகர்களை கவர்கிறார்.
அபிராமி இந்தப் படத்தில் எதிர்பாராத அளவுக்கு அதிரடி முகத்தை காட்டியிருக்கிறார். குடும்ப பெண்ணாக மட்டுமல்லாமல் சண்டைக் காட்சிகளிலும் திறமையாக செயல்பட்டு கவனம் ஈர்க்கிறார். அவரது கண் பார்வை மற்றும் இயல்பான நடிப்பு பல காட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
34
பிளாஸ்ட் ரிவ்யூ
மகளாக நடித்துள்ள ப்ரீத்தி முகுந்தனுக்கு இந்தப் படம் முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. வழக்கமான காதல் அல்லது கிளாமர் கதாபாத்திரங்களைத் தாண்டி, தவறுகளுக்கு எதிராக போராடும் துணிச்சலான இளம்பெண்ணாக அவர் நடித்திருப்பது ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சண்டைக் காட்சிகளிலும் முழு ஈடுபாட்டுடன் நடித்திருப்பது தெளிவாக தெரிகிறது.
ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பவன் ஆகியோர் வில்லன் கதாபாத்திரங்களில் தனித்தனி மெருகை காட்டியுள்ளனர். ஒவ்வொருவருக்கும் தனி பாணியில் வடிவமைக்கப்பட்ட வேடங்கள் கதையின் மோதல்களை வலுப்படுத்துகின்றன. பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்கான பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். குறிப்பாக விவேக் பிரசன்னாவின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் மனதில் நிற்கும் வகையில் அமைந்துள்ளது.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் பல சவாலான காட்சிகளை திறமையாக கையாண்டு, படத்தின் ஆக்ஷன் தன்மையை அழகாக பதிவு செய்துள்ளார். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை படத்தின் அதிரடியை மேலும் உயர்த்துகிறது.
சண்டைப் பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவின் உழைப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக இருக்கிறது. அர்ஜுனை மட்டுமல்லாமல் அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் சண்டைக் காட்சிகளையும் ரசிக்கும்படி வடிவமைத்திருக்கிறார்.
இயக்குநர் சுபாஷ் கே. ராஜ், சாதாரண ஆக்ஷன் கதையை பெண்களின் துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கை மையப்படுத்திய திரைக்கதையாக மாற்றியிருக்கிறார். வில்லன் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தியிருப்பது படத்தின் கூடுதல் பலமாக அமைந்துள்ளது.