
'திரிஷ்யம் 3' இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மலையாளப் படங்களில் ஒன்று. ரசிகர்கள் இந்தப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். முதல் இரண்டு பாகங்கள் கொடுத்த சஸ்பென்ஸ், த்ரில் மற்றும் ஆடியன்ஸை இருக்கை நுனியில் உட்கார வைத்த கிளைமாக்ஸ் போன்ற மேஜிக்கை மூன்றாவது பாகமும் செய்யும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த முறை படம் அந்த அளவுக்கு தாக்கத்தை திரிஷ்யம் 3 ஏற்படுத்தியதா என்பதைப் பற்றி இந்த விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம்.
'திரிஷ்யம் 3' மீண்டும் அதே ஜார்ஜ் குட்டி மற்றும் அவரது குடும்பத்தை சுற்றி நடக்கிறது. முதல் இரண்டு பாகங்களில் நாம் பார்த்த அதே கதாபாத்திரங்கள்தான். படத்தின் இரண்டாம் பாகம் முடிந்ததிலிருந்து நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு கதை தொடங்குகிறது. மீண்டும் அந்த கேஸ் திறக்கப்படுகிறது, ஜார்ஜ் குட்டி தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய சவாலை எதிர்கொள்கிறார். 'வருடங்கள் கடந்துவிட்டன... கடந்த காலம் அல்ல' என்பதுதான் படத்தின் டேக்லைன். ஆனால், இரண்டாம் பாகத்தில் இருந்த புதுமை, இந்த மூன்றாவது பாகத்தில் இல்லை என்பது ஒரு குறை.
மோகன்லால் மீண்டும் ஒருமுறை தனது கதாபாத்திரத்தை நேர்மையாக கையாண்டிருக்கிறார். அவரது ஸ்கிரீன் பிரசன்ஸ் படத்திற்கு ஒரு பெரிய பலம். மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்துள்ளனர். ஆனால், இந்த முறை திரைக்கதை நடிகர்களுக்குப் புதிதாகவோ அல்லது சவாலாகவோ எதையும் செய்ய வாய்ப்பளிக்கவில்லை. இதனால்தான், சிறப்பான நடிப்பு இருந்தபோதிலும், கதாபாத்திரங்கள் முந்தைய பாகங்களைப் போல மனதில் ஆழமாகப் பதியவில்லை.
இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது படங்களின் அட்டகாசமான ட்விஸ்ட்கள் மற்றும் கிளைமாக்ஸுக்காக பெயர் பெற்றவர். ஆனால் இந்த முறை, அவருடைய அந்த மேஜிக் முழுமையாக வெளிப்படவில்லை. படத்தின் விசாரணை, சஸ்பென்ஸ் மற்றும் எமோஷனல் காட்சிகள் பெரும்பாலும் பழைய பாகங்களைப் போலவே இருக்கின்றன. இந்த பிரான்சைஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்குப் பதிலாக, பழைய ஃபார்முலாவையே அதிகம் நம்பியிருக்கிறார்கள்.
இதனாலேயே கதை பல இடங்களில் யூகிக்கக் கூடியதாக இருக்கிறது. படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக நகர்கிறது. கதை பெரிதாக முன்னேறவில்லை. ஆனால், இன்டர்வெல் பிளாக் ஓரளவிற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது. இரண்டாம் பாதியில் மர்மங்கள் விலகத் தொடங்கினாலும், 'திரிஷ்யம்' படங்களுக்குப் பெயர் போன அந்த த்ரில்லை முழுமையாகக் கொண்டுவர முடியவில்லை.
'திரிஷ்யம் 3' தொழில்நுட்ப ரீதியாக ஒரு நல்ல படம்தான். பின்னணி இசை பல காட்சிகளில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறது. ஒளிப்பதிவும் படத்தின் சீரியஸான சூழலுக்கு உதவுகிறது. இருப்பினும், முதல் இரண்டு படங்களில் இருந்தது போன்ற மறக்க முடியாத தாக்கத்தை இசையும் பின்னணி இசையும் ஏற்படுத்தவில்லை. மொத்தத்தில், டெக்னிக்கலாக படம் வலுவாக இருந்தாலும், கதை அந்த அளவுக்கு ஈர்க்கவில்லை.
நீங்கள் 'திரிஷ்யம்' பிரான்சைஸின் தீவிர ரசிகராக இருந்து, மோகன்லாலை மீண்டும் அதே ஜார்ஜ் குட்டி கதாபாத்திரத்தில் பார்க்க விரும்பினால், இந்தப் படம் உங்களுக்கு சில இடங்களில் பிடிக்கலாம். ஆனால், முதல் இரண்டு பாகங்களைப் போன்ற அதிர்ச்சியூட்டும் கதை மற்றும் வலுவான கிளைமாக்ஸை எதிர்பார்த்துச் சென்றால், உங்களுக்குச் சற்று ஏமாற்றமே மிஞ்சும். படம் பல இடங்களில் ஒரே மாதிரியாகவும், யூகிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதுவே படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறி உள்ளது.