Idli Kadai : தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் முழு விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தனுஷ் இயக்கி, நித்யா மேனனுடன் இணைந்து நடித்துள்ள படம் 'இட்லி கடை'. ஷாலினி பாண்டே, அருண் விஜய், சமுத்திரக்கனி, சத்யராஜ், ராஜ் கிரண் மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் வொண்டர் பார் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு இசை அசுரன் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் சார்பாக இன்பன் உதயநிதி வெளியிட்டுள்ளார். இப்படத்தின் கதை என்ன? படம் எப்படி இருக்கிறது? என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.
24
இட்லி கடை படத்தின் கதை
பாரம்பரிய இட்லி கடையை நடத்தும் தந்தை, நவீனமயமாக்க விரும்பும் மகன் (தனுஷ்). கருத்து வேறுபாட்டால் நகரம் செல்லும் தனுஷ், காதலில் விழுகிறார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு, அவர் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. அதன் பின் அவர் என்ன முடிவு எடுத்தார் என்பதே கதை. முன்னோர்களின் தொழிலையும், பாரம்பரியத்தையும் மறக்கக் கூடாது என்ற கருத்தை படம் சொல்கிறது. உணர்வுப்பூர்வமான கதை. தனுஷ் யதார்த்தமான நடிப்பால் படத்தை தாங்குகிறார். ஆனால், சில இடங்களில் மெதுவாக நகரும் திரைக்கதை ஒரு குறை. மற்றபடி இட்லி கடை ஒரு அழகிய படைப்பாகவே இருக்கிறது.
34
இட்லி கடை விமர்சனம்
படத்தின் முக்கிய பலம் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் தனுஷின் நடிப்பு. நித்யா மேனனின் பாத்திரமும் கவர்கிறது. ஆனால், மெதுவான திரைக்கதையும், யூகிக்கக்கூடிய காட்சிகளும் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. முருகன் கதாபாத்திரத்தில் தனுஷ் வாழ்ந்திருக்கிறார். கல்யாணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நித்யா மேனன் கிராமத்து பெண்ணாக அசத்துகிறார். ராஜ் கிரண், சத்யராஜ், அருண் விஜய் போன்றோரும் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்துள்ளனர். அனைவரின் தங்கள் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி வலு சேர்த்துள்ளனர். ராஜ்கிரண் - கீதா கைலாசம் ரெண்டு பேரும் அவங்க கேரக்டராவே வாழ்ந்திருக்காங்க. தனுஷ் ஒரு ரைட்டரா இந்த படத்துல மத்த படங்களை விட இன்னும் மேல போயிருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை அருமை. பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன. கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பிரசன்னாவின் படத்தொகுப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். சில காட்சிகளில் தொய்வை தவிர்த்திருக்கலாம். துப்பாக்கி சத்தமும், வெட்டுக் குத்தும் நிறைந்த படங்கள் படையெடுத்து வருவதற்கு மத்தியில் பூ போன்ற இட்லியை போல, ஒரு மென்மையான, உணர்வுப்பூர்வமான் ஃபீல் குட் படமாக இந்த 'இட்லி கடை' அமைந்திருக்கிறது. சிம்பிளான கதையை சுவாரஸ்யமாக சொன்ன விதத்தில் கவர்ந்திருக்கிறார் இயக்குனர் தனுஷ்.