
அனுஷ்கா ஷெட்டி நடித்த காட்டி (Ghaati) இன்று செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. கிருஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனுஷ்கா ஷெட்டியிடமிருந்து வரும் படம் என்பதால் இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. டீசர், டிரெய்லர்களில் அனுஷ்காவை மாஸ் அவதாரத்தில் காட்டியுள்ளனர். கிழக்கு மலைத்தொடர் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. அனுஷ்கா ஷெட்டியின் இந்த ஆக்ஷன் படம் ரசிகர்களை கவர்ந்ததா? என்பதை ட்விட்டர் விமர்சனத்தில் பார்க்கலாம்.
அனுஷ்கா ஷெட்டி, ஆரம்பத்தில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்தாலும் போகப் போக கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடித்து மாஸ் இமேஜை பெற்றார். அதனால்தான் தயாரிப்பாளர்கள் அனுஷ்காவை வைத்து ஹீரோயினை மையப்படுத்திய படங்களை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். காட்டி படத்திலும் அனுஷ்கா தான் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவருடன் விக்ரம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரீமியர் ஷோக்களில் இருந்து காட்டி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகின்றன.
முதல் பாதி சராசரியாக உள்ளது என்றும், இரண்டாம் பாதி பொறுமையை சோதிப்பது போல் உள்ளது என்றும் ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். இயக்குனர் கிருஷ் தேர்ந்தெடுத்த கரு சிறப்பாக உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால் அதை செயல்படுத்திய விதம் கொஞ்சமும் ஈர்க்கவில்லை என்கின்றனர். இடையிடையே அனுஷ்காவை உயர்த்தும் வகையில் சில மாஸ் காட்சிகள் உள்ளன. அவை நன்றாக உள்ளன என படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக அதிரடி காட்சிகளில் அனுஷ்கா ஷெட்டி மிரட்டியுள்ளாராம். சில காட்சிகளில் அனுஷ்கா காட்டேரி போல தோன்றி, அசத்தியுள்ளார் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். விக்ரம் பிரபு, சைதன்ய ராவ், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அவர்களின் நடிப்பும் நன்றாகவே உள்ளது. முதல் பாதியில் இடையிடையே ஈர்க்கும் காட்சிகள் உள்ளன. இடைவேளை எபிசோடும் நன்றாக வந்துள்ளது. மீதமுள்ள காட்சிகள் படத்திற்கு எந்தப் பயனும் இல்லை என்று கூறுகின்றனர்.
இரண்டாம் பாதியாவது சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் நடக்கவில்லை. இரண்டாம் பாதியில் அதிரடி காட்சிகள் அதிகளவில் உள்ளன. நீண்ட அதிரடி காட்சிகள் ரசிகர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக இயக்குனர் கிருஷ் தேர்ந்தெடுக்கும் கதைகள், படமாக்கும் விதம் ரசிகர்களிடம் சிந்தனைகளைத் தூண்டும் வகையில் இருக்கும். ஆனால் காட்டி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கூர்மையான வசனங்களும் இல்லை. சாகர் நாகவெல்லியின் இசை கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை. மொத்தத்தில் காட்டி படத்திற்கு பிரீமியர் ஷோக்களில் இருந்து கலவையான விமர்சனங்கள் வருகின்றன. இந்தப் படம் வசூலில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.