
'அமரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. அவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள படம் 'மதராஸி'. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீலட்சுமி மூவிஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால், மலையாள நடிகர் பிஜு மேனன், விக்ராந்த், ஷாபிர், ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள மதராஸி படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது.
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள மதராஸி படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளார், சுதீப் எலமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சில முக்கிய காட்சிகளுக்கு நாக் ஸ்டுடியோஸ், பேண்டம் எஃப்எக்ஸ், பீஸ்ட் பெல்ஸ் ஆகியவை விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை செய்துள்ளன. உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்கள் கருத்துகளை எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
மதராஸி படத்தின் கதையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் சட்டவிரோத ஆயுதக் கடத்தலை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. வட இந்திய மாஃபியாவுக்கும், இரண்டு சிறப்பு அதிரடிப் படைகள் இடையே நடக்கும் ஆக்ஷன் நிறைந்த படமாக இது உருவாகியுள்ளது. நாயகன் சிவகார்த்திகேயன் ரகு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரகு தனது காதலியைக் காப்பாற்ற களமிறங்குகிறார், ஆனால் அவரது நிலையற்ற மனநிலை அவரை வன்முறை பக்கம் இழுத்துச் செல்கிறது. இதனால் அவர் ஹீரோவா அல்லது வில்லனா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதல், பழிவாங்கல், தியாகம், நட்பு, இரண்டு குழுக்களுக்கு இடையிலான போர் போன்ற அம்சங்கள் கதையில் முக்கியமாக இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பு அற்புதம். தனது நடிப்பால் படத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். படத்தின் கதைக்களம் வலுவானது. ஏ.ஆர். முருகதாஸின் திரைக்கதை, இயக்கம் சிறப்பாக உள்ளது. அனிருத்தின் இசை, பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது. படத்தின் தரமும் அருமையாக உள்ளது. ருக்மிணி வசந்த் தனது அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். காதல் காட்சிகள் சிறப்பு. இந்தப் படத்திற்கு எனது மதிப்பீடு 4/5 என்று ஒரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு ரசிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படம் குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்தப் படத்திற்கு 2½/5 மதிப்பீடு அளித்துள்ளார். படத்தின் தரம், வண்ணமயமாக்கல் நன்றாக உள்ளது என்றும், வித்யுத் ஜம்வால் தனது தோற்றம் மற்றும் ஆக்ஷன் ஸ்டண்ட்களால் படத்திற்கு வலு சேர்த்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ருக்மிணி வசந்த் “மாலதி” கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பயனர் மதராஸி படம் குறித்து தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில் இந்தப் படம் மிகவும் சகிக்க முடியாததாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர். முருகதாஸின் முயற்சி தெரிந்தாலும், மந்தமான ரைட்டிங் படத்தை பார்ப்பவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தொடர்ந்து வரும் பில்டப் காட்சிகள், அழுகைக் காட்சிகள் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. இந்தப் படத்தில் குறைகள் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு ரசிகர் மதராஸி படம் குறித்து தனது விமர்சனத்தை அளிக்கையில், முதல் பாதியில் சிவகார்த்திகேயனின் நடிப்பு "ஓகே" என்றும், காதல் காட்சிகள், பாடல்கள் சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ருக்மிணி வசந்தின் நடிப்பு அற்புதம் என்று பாராட்டியுள்ளார். இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்தன என்றும், இரண்டாம் பாதியில் பிஜு மேனனின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது என்றும் கூறியுள்ளார். ஆனால், அடுத்தடுத்த காட்சிகள் எளிதில் யூகிக்கக்கூடியதாக இருந்தன என்றும், படம் மிகவும் நீளமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். கிளைமாக்ஸ் வழக்கமானதாகவும், எதிர்பார்த்தது போலவே இருந்தது என்றும், ஏ.ஆர். முருகதாஸின் ரைட்டிங்கில் குறைபாடு உள்ளது என்றும் கூறி உள்ளார்.
சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கருத்துகளின்படி, மதராஸி படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது சில ரசிகர்களின் கருத்து மட்டுமே என்பதால், உண்மையில் படம் எப்படி இருக்கிறது? சிவகார்த்திகேயனின் கணக்கில் மற்றொரு வெற்றி படமா? ஏ.ஆர். முருகதாஸுக்கு 'மதராஸி' மீண்டும் வெற்றிப் படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.