
ஸ்ரீ கணேஷ் இயக்கியுள்ள திரைப்படம் 3 பி.ஹெச்.கே. இப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவையானி, மீதா ரகுநாத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரித் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை தினேஷ் பி கிருஷ்ணன் மற்றும் ஜிதின் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். படத்தொகுப்பாளராக கணேஷ் சிவா பணியாற்றி இருக்கிறார். இப்படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சார்பாக அருண் விஸ்வா தயாரித்துள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.
சொந்த வீடு என்பது பலரது கனவாக இருக்கும். அப்படி சொந்த வீடு கட்ட வேண்டும் என்கிற ஒரு மிடில் கிளாஸ் பேமிலியின் கதை தான் இந்த 3 பி.ஹெச்.கே. இப்படத்தில் சரத்குமாரின் மனைவியாக தேவையானியும், மகனாக சித்தார்த்தும், மகளாக மீதா ரகுநாத்தும் நடித்துள்ளனர். அவர்களின் சொந்த வீடு கனவு நனவானதா என்பதே படத்தின் கதை. இப்படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தள பக்கங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
3 பி.ஹெச்.கே என்னை ஒரு காட்சியில் அழ வைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக... மெது மெதுவாக படம் முழுக்க அழ வைத்தது. ஏனெனில் சில நேரங்களில் ஒரு மனமுடையும் தருணத்தை விட சின்ன சின்னதாக ஆயிரக்கணக்கான மனமுடையும் தருணங்கள் நாம் ஒவ்வொரு நாளும் சுமந்துகொண்டிருப்போம். இந்தப் படம் இவை அனைத்தையும் சுமந்து செல்கிறது என பதிவிட்டுள்ளார்.
3 பி.ஹெச்.கே திரைப்படம் உங்களை ஃபீல் பண்ண வைக்கும், உங்களால் ரிலேட் செய்து பார்க்க வைக்கும். இறுதியில் உங்களை நம்பிக்கையுடன் உணர வைக்கும். சில படங்கள் உங்களை ஊக்குவிக்கும். அதுபோன்ற படம் தான் இது. ஸ்ரீ கணேஷிற்காக மிகவும் சந்தோஷம். தியேட்டரில் படத்தை பேமிலியோடு சென்று பார்த்து மகிழுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
3 பி.ஹெச்.கே ஒரு படம் மட்டுமல்ல; ஒவ்வொரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதை. பல நிராகரிப்புகள், தோல்விகள், பின்னடைவு என எது வந்தாலும் ஒரு நாள் நம் வாழ்க்கை மாறாதா என்கிற நம்பிக்கையுடன் வாழ்வோம். அந்த நாளுக்காக நாம் கடினமாக உழைப்போம். நாம் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளும் விஷயங்களை தான் இந்தப் படம் பிரதீபலிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
ஒரு கூடு கட்ட முயலும் அழகிய தூக்கணாங் குருவிகளாய் ஒரு குடும்பம். கண் முன்னே அவர்களின் வாழ்க்கையை அழகிய தொகுப்பாய், ஒரு photo album காண்பிப்பது போல் படம் எடுத்து காட்டி, தன் பரிசுத்த சிரிப்பால், முதன் முறையாக தன் இயல்பு பிரதிபலிக்கும் வகையில் 3BHK எனும் பேரழகு படம் எடுத்திற்கு ஸ்ரீ கணேஷிற்கு வாழ்த்துகள்! பெண்ணின் பிறந்த வீடு, ஒரு போதும் அவளுக்கு அந்நியமாகி போகாது, பாரமாகி விடாது என்று அழகாய், ஆழமாய் சொன்னதிற்கு நன்றி. இன்றைய சூழலில் அவசியம் அந்த நம்பிக்கையை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது என இயக்குனர் ஹலீதா ஷமீம் பதிவிட்டுள்ளார்.