போதாதென்று, அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா? யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?
ஆட்சியில் இல்லாதபோது ‘தமிழ் தமிழ்’ என்பதும், ‘தமிழர் தமிழர்’ என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?
சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை? அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?
பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும், குமைச்சலுமன்றி வேறென்ன? 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு ‘பக்கா மாஸ்’ கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?