
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்குகின்ற இந்த சூழலில் திமுக தேர்தல் வேலையை தொடங்கிவிட்டது. அனேகமாக சென்னை நகரை பொருத்தமட்டில் கடந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. அதேசமயம் இதில் விருகம்பாக்கம் தொகுதி மட்டும் விதிவிலக்காக இருக்கிறது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் எம்எல்ஏக்களின் செயல்பாடுகள், மீண்டும் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு, தொகுதியில் செல்வாக்கான நபர் யார்? என தனியார் நிறுவனங்கள் மூலம் ரகசிய சர்வேயை திமுக தலைமை எடுத்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் சென்னையை முழுமையாக கைப்பற்றியது. மொத்தம் உள்ள 16 தொகுதிகளையும் வாரிச்சுருட்டியது. ஆனால், இந்த முறை சென்னை திமுகவிற்கு கடும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் அதிமுக, பாஜக களப்பணிகை தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக சென்னை தியாகராய நகர் தொகுதியில் கடந்த முறை வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி பெற்றது. எனவே அந்த தொகுதியை குறிவைத்து அதிமுக மற்றும் பாஜக போட்டி போட்டு காய் நகர்த்தி வருகிறது. அதேபோல சென்னையில் திமுகவிற்கு வீக்கான தொகுதிகளில் ஏற்கனவே களப்பணியை தொடங்கியுள்ளது. இதில் விருகம்பாக்கம் தொகுதியும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. விருகம்பாக்கம் தொகுதியில் செல்வாக்கு மிக்க நபராக இருப்பவர் திமுக நிர்வாகி கே.கே.நகர் தனசேகரன். கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தனசேகரன், விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
எனவே அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்காமல் வணிகர் சங்க பேரமைப்பு தலைவராக இருந்த விக்ரம ராஜாவின் மகன் பிரபாகர் ராஜாவிற்கு 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் வணிகர் சங்கத்தின் சார்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. எனவே வணிகர்களின் வாக்குகளை கவரும் வகையில் பிரபாகரன் ராஜாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதே நேரம் தனக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப் பறித்ததால் பிரபாகர் ராஜா மீது தனசேகரன் கடும் அதிருப்தியில் இருந்தார். திமுக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியான தினத்தில் தனசேகரனை சந்தித்து பிரபாகராஜா வாழ்த்து பெற அவரது வீட்டிற்கு சென்றபோது தனது ஆதரவாளர்கள் மூலம் தனசேகரன் தாக்கவும் செய்தார்
இதனை அடுத்து தனசேகரன் திமுக தலைவர் ஸ்டாலினிடமும் முறையிட்டார். தனசேகரனை சமாதானம் செய்த ஸ்டாலின் தேர்தல் பணியை செய்யும்படி அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வைத்தார். தலைமையின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் தனசேகரன் ஈடுபட்டு வந்தார். இறுதியாக அதிமுக மீது அப்போது இருந்த அதிருப்தி காரணமாக வாக்குகள் திமுகவிற்கு சாதகமாக சென்றது. அதிமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா சுமார் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விருகம்பாக்கம் தொகுதியைப் பொருத்தமட்டில் இங்கே பூர்வகுடி மக்களை விட தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் தான் அதிக அளவில் வசிக்கின்றனர். வெற்றி நிலவரத்தை தீர்மானிப்பதில் சென்னையில் செட்டிலான தூத்துக்குடி, திருநெல்வேலியைச் சேர்ந்த நாடார் சமூகத்தினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதன் அடிப்படையில் தான் கடந்த முறை பிரபாகர் ராஜா வெற்றி பெற்றார்.இதனை அடுத்து விருகம்பாக்கம் தொகுதியை மீண்டும் பிரபாகர் ராஜா தக்க வைப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், கட்சி பணிகளிலும், மக்கள் பணிகளிலும் முழு கவனம் செலுத்தவில்லை என விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த திமுகவினரே தெரிவித்து வருகிறார்கள்.
எனவே இந்த முறை திமுக விருகம்பாக்கம் தொகுதி பிரபாகராஜாவிற்கு வழங்க வாய்ப்பு இல்லை எனக்கூறப்படுகிறது. தனசேகரனுக்கு கிடைக்குமா? என்றால் அதுவும் கேள்விக்குறிதான் என்கிறார்கள். தனசேகரன் மீது கட்டப்பஞ்சாயத்து புகார் ஏற்கனவே உள்ள நிலையில், தனசேகரனின் பேரன் தனது தாத்தாவின் அதிகாரம் இருக்கும் தைரியத்தில் காரை கொண்டு மோதி கல்லூரி மாணவர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தால் தனசேகரனுக்கு கரும்புள்ளி ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், இந்த முறை விருகம்பாக்கம் தொகுதியில் தணிக்கை குழு தலைவர் தனசேகரனுக்கு வாய்ப்பளிக்க திமுக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுகவின் விசுவாசியான தனசேகரன் விருகம்பாக்கம் தொகுதியில் சீரிய முறையில் களப்பணி ஆற்றி வருவதால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே நேரம் திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் பட்சத்தில் விருகம்பாக்கம் தொகுதியை ஒதுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக சார்பில் கடந்த முறை வெற்றி வாய்ப்பை இழந்த விருகை வி.என். ரவி மீண்டும் போட்டியிடுவார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த தொகுதியில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.