யார் இந்த செந்தில் பாலாஜி..? அரசியலில் நுழைந்து அமைச்சரானது எப்படி.? கடந்து வந்த பாதை...

First Published | Jun 14, 2023, 7:59 AM IST

மதிமுக மற்றும் அதிமுகவில்  அரசியல் பயணத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி தற்போது திமுகவில் பலம் வாய்ந்த அமைச்சர்களில் ஒருவராக இருந்து வந்தார். இந்தநிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்..

செந்தில் பாலாஜி அரசியல் பயணம்

கரூர் மாவட்டத்தில் ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த வி. செந்தில்குமார் தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார். அரசியல் மீது இருந்த ஆர்வம் காரணமாக தனது கல்லூரி படிப்பை இடைநிறுத்தம் செய்த செந்தில் பாலாஜி 1994ஆம் ஆண்டு மதிமுக-வில் அரசியல் பயணத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி 1996ல் திமுக-வில் இணைந்தார். ஆனால் அங்கு தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் 4 ஆண்டுகளுக்கு பின் 2000ல் திமுகவிலிருந்து விலகி  சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் அவர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதிமுகவில் அதிகார அமைச்சர்

அதிமுகவில் சேர்ந்த சிறிது நாட்களிலையே செந்தில் பாலாஜிக்கு  கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் பொறுப்பு, அடுத்து படிப்படியாக  கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என தனது அரசியல் வாழ்க்கையில் உயரத்தை நோக்கி சென்றார். இதனையடுத்து 2006, 2011, 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  

ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில்  2011-2015 வரை அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவும், செல்லப்பிள்ளையாகவும் இருந்தார். ஆனால் 2015  ஆம் ஆண்டு செந்தில் பாலாஜிக்கு இறங்கு முகம் தொடங்கியது, அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ஜெயலலிதாவால் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார்.

Tap to resize

senthil balaji

இபிஎஸ்யால் பதவி பறிக்கப்பட்டது

இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது செந்தில் பாலாஜி தொகுதியில் அதிகளவு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட காரணத்தால் அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து அதிமுக ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றிபெற்றார். ஆனால் அந்த நாட்களில் மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதா, சில நாட்களில் உயிர் இழந்தார். இதனையடுத்து அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக டிடிவி அணியில் இருந்து செயல்பட்டார்.  அப்போது எடப்பாடி ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட காரணத்தால் 2017ஆம் ஆண்டு சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக செந்தில் பாலாஜி இருந்தார். 
 

அமலாக்கத்துறையால் கைது

இதனையடுத்து டிடிவி தினகரனோடு ஏற்பட்ட அதிருப்தி மற்றும் தனது அடுத்தகட்ட அரசியல் வாழ்க்கையை கருத்தில் கொண்டு தனது ஆதரவாளர்களோடு திமுகவில் இணைந்தார்.  2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து திமுகவில் முக்கிய நபராக மாறிய செந்தில் பாலாஜிக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து 2021 சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு மின்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தநிலையில் தான் செந்தில் பாலாஜி உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில் நேற்று அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி வீட்டிலேயே சோதனை செய்தது. இதனையடுத்து நேற்று நள்ளிரவு அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். 

Latest Videos

click me!