காங்கிரஸின் ஐவர் குழு அறிவாலய ரூட்டில் சென்று கொண்டிருக்கும்போதே காங்கிரசின் பிரதிநிதி பட்டினப்பாக்கத்தில் விஜய் வீட்டில் முகாமிட்டதுதான் தற்போது திமுக கூட்டணி கூடாரத்தில் ஹாட் டிராபிக். திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ், தவெக பக்கம் செல்ல வாய்ப்பு இருப்பதாக சில நாட்களாகவே பேச்சு நிலவி வருகிறது. ராகுல் காந்திக்கும், விஜய்க்கும் இருக்கும் நட்பு வருகிற தேர்தலில் கூட்டணியாக மாறுமா? என்ற விவாதமும் சூடு பிடித்துள்ளது. ஆனால், பீகார் தேர்தலுக்குப் பிறகு இந்த விவாதம் வேறு கோணத்தில் திரும்பி, அங்கு படு தோல்வியை சந்தித்த காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருப்பதுதான் நல்லது என சில அரசியல் விமர்சகர்கள் கூற, அதற்கு ஏற்ப திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அமைத்தது காங்கிரஸ் மேலிடம்.
இந்த ஐவர் குழு இரண்டு நாட்களுக்கு முன்பாக அறிவாலயம் வந்து முதலமைச்சரை சந்தித்ததோடு காங்கிரஸ் வெற்றி பெறச் சாதகமான 40 தொகுதிகளை கொண்ட பட்டியலை வழங்கியதாக சொல்லப்பட்டது. இந்நிலையி எதிர்பாராத திருப்பமாக ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர்களில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, பட்டினப்பாக்கம் வீட்டில் வைத்து விஜயை சந்தித்து பேசியதாக தகவல். இரண்டு நாட்களுக்கு முன்பு ஐவர் குழு அறிவாலயம் சென்று வந்த தடம் மாறுவதற்குள் ராகுல் காந்தியின் பிரதிநிதியான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்திருப்பது காங்கிரஸ் கட்சியினருக்கே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.