
திமுக கூட்டணியில் தொடர, தொகுதிகளை அதிகப்படுத்தி தரவேண்டும், மூன்று அமைச்சர் பதவியும் தரவேண்டும் என போர் கொடி பிடித்த காங்கிரஸ் கட்சிக்கு கல்தா கொடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் திமுக முனைப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் கட்சி என பல கட்சிகள் கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் கடந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றியும் பெற்றிருந்தார்கள்.
இந்நிலையில் தங்களுக்கு தற்போது 35 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க வேண்டும். அத்தோடு தொழில் வளத்துறை அமைச்சர் பதவி, நீர்வளத்துறை அமைச்சர் பதவி உள்ளிட்ட மூன்று பதவிகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி போர்க்கொடி பிடித்துள்ளது. இதற்கு சம்மதம் தெரிவிக்காத நிலையில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தாவ காங்கிரஸ் கட்சி முயற்சி செய்து வருகிறது. அதேவேளை காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுத்து வருகிறார்.
தற்பொழுது காங்கிரஸ் முரண்டு பிடித்தால் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 25 வேறு மூன்று கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு பிரித்துக் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆகியோருடன், திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அந்த கட்சிகள் கூட்டணியில் இணைவதற்கான பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்கிறார்கள். இதற்கிடையே தமிழக முன்னேற்றக் கழக தலைவர், ஜான்பாண்டியன் திமுகவில் இணைய போவதாக புதிய தகவல் வெளியே கசிந்திருக்கிறது.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள் சிவலார் குளத்தைச் சேர்ந்தவர் ஜான் பாண்டியன். இவரது மனைவி பிரிசில்லா பாண்டியன். இவர்கள் இருவருமே தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் மிகவும் பிரபலமானவர்களாக திகழ்ந்து வருகிறார்கள். ஜான் பாண்டியன் ஆரம்ப காலகட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். அந்த கட்சியில் இளைஞரணி செயலாளராக இருந்தவர். பிறகு தமிழக முன்னேற்ற கழகம் என்ற கட்சியையும் உருவாக்கினார். இதனை தொடர்ந்து அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பல தேர்தல்களை சந்தித்திருந்தார்.
கிட்டத்தட்ட ஏழு தேர்தல்களில் போட்டியிட்டாலும் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றதில்லை. இருந்தபோதிலும் இவருக்கு பின்னால் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. கடந்த தேர்தல் வரை அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த ஜான்பாண்டியன் தற்போது திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது குறித்த தகவலை திமுகவை சேர்ந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்ட திமுக செயல் குழு கூட்டத்தில், தேர்தல் பணிக்குழு தலைவரும், வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில் துறை அமைச்சருமான ராஜ.கண்ணப்பன் பேசும்போது,‘‘நமது கூட்டணிக்குள் ராமதாஸ் வந்து கொண்டிருக்கிறார். ராமதாசுடன் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதேபோல்தான் ஜான்பாண்டியனிடமும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால் ஜான்பாண்டியன் நமது கட்சியில் இணைகிறார் .
எனவே கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்’’ என ராஜ கண்ணப்பன் பேசியதன் மூலம் மருத்துவர ராமதாஸும், ஜான்பாண்டியனும திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வருவதற்கு முன் உடன்பாட்டுக்கு ஒத்து வந்தால் காங்கிரஸ் மீண்டும் திமுகவுடன் கூட்டணி சேரும். இல்லாவிட்டால் தவெக கூட்டணிக்கு தாவுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவதற்கு முன் ஜான் பாண்டியன் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி சேரும் முடிவில இருந்தார். ஆனால் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார். ஜான் பாண்டியன் திமுகவில் இணையும் பட்சத்தில் அவருக்கு திருநெல்வேலி அல்லது தென்காசி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியை ஒதுக்கி தரப்படும் என தெரிகிறது. அதேபோல் மருத்துவர் ராமதாசை பொருத்தவரை திமுக கூட்டணி அமைந்தால் அந்த கட்சியை சேர்ந்த ஜி.கே.மணி, அருள் எம்எல்ஏ, காந்தி ஆகியோருக்கு தொகுதிகள் தரப்படும் எனக் கூறப்படுகிறது.
மொத்தம் 15 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படலாம் என கூறப்படுகிறது.