அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்று அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது. அந்த கையோடு அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கி மீண்டும் கழகத்தில் சேருபவர்கள் மட்டுமே, கழக உறுப்பினர்களாகக் கருதப்படுவர் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தேனி மாவட்ட நிர்வாகிகள் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை;- அதிமுகவிலிருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த முருக்கோடை ராமர்( கடமலை- மயிலை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்), அன்னப்பிரகாஷ் (வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பெரியகுளம் ஒன்றியம்) ஆகியோர், தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்புக்கோரி, தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டி கேட்டுக்கொண்டதால் உறுப்பினர்களாக கழகத்தில் இணைந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கடிதம் கொடுப்பவர்கள் மீண்டும் கட்சியில் இணையலாம் என்று இபிஎஸ் கூறிய நிலையில் முதல் இணைப்பாக ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது.