தமிழ்நாட்டில் உள்ள 5,329 டாஸ்மாக் மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என்று கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன்படி கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
இதன் காரணமாக, டாஸ்மாக்கில் தினசரி வருவாய் ரூ.35 கோடி வரை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினசரி ரூ.150 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது ரூ.110 முதல் ரூ.120 கோடி தான் தினசரி விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மதுபான விற்பனை குறைந்தது தொடர்பாகவும், அதிக விலைக்கு மது விற்பனை தடுப்பது, பிரச்சனைக்குரிய கடைகளை மூடுவது, சிசிடிவிக்கள் பொருத்துவது, கணினி வழி ரசீது, கட்டுப்பாட்டு அறை அமைப்பது உள்ளிட்டவை குறித்து தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இதில், உள்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.