திராவிட மாடல் அரசின் திட்டங்கள் ராஜஸ்தானிலும் அமல்! எந்த திட்டம் தெரியுமா? காலரை தூக்கி விடும் முதல்வர்.!

First Published | Jul 7, 2023, 1:19 PM IST

கோயில்கள் மிகச் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகதான் இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியதே நம்முடைய நீதிக்கட்சிதான் என்பதை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சார்பில் 34 ஜோடிகளுக்கு திருமணங்களை தலைமையேற்று முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். அப்போது, பேசிய முதல்வர் ஸ்டாலின்;-  எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி நம்முடைய திராவிட மாடல் அரசு பீடுநடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும்.

mk stalin

குறிப்பாக, கல்வி - தொழில் - பொருளாதாரம் - சமூகம் - சமயம் ஆகிய அனைத்துத் துறைகளிலும், அனைத்து மக்களும் கோலோச்ச வேண்டும் என்று நினைக்கக்கூடிய அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. எந்த மனிதரையும் சாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்காகத்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நம்முடைய அரசு கொண்டு வந்திருக்கிறது.
 

Tap to resize

இன்றைக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் 8 பெண்கள் உட்பட பட்டியலினத்தவர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த 17 பேரை அர்ச்சகராக்கி இருக்கிறார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தால் யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைத் வழங்கியிருக்கிறது. எல்லார்க்கும் எல்லாம் என்ற கருத்தியல் என்பது இதுதான். நம்முடைய ஆட்சியின் நோக்கத்தை இன்றைக்கு நீதிமன்றமும் அங்கீகரிக்கக்கூடிய காலமாக ஏன், இந்தியாவில் இருக்கக்கூடிய மற்ற மாநிலங்களும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலை அமைந்திருக்கிறது.

அனைத்துத் துறைகளும் வளர வேண்டும் என்ற அடிப்படையில் நம்முடைய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை எல்லோரும் நன்றாக அறிவீர்கள். அதில் இந்து சமய அறநிலையைத் துறையும் மற்ற துறைகளோடு போட்டி போட்டுக்கொண்டு மிக, மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை இன்றைக்கு நாடு நன்றாக உணர்ந்து கொண்டிருக்கிறது. கோயில்கள் மிகச் சிறப்பாகவும் சீராகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகதான் இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கியதே நம்முடைய நீதிக்கட்சிதான் என்பதை நாம் யாரும் மறந்துவிடக் கூடாது. 

கோவில் கூடாது என்பதல்ல, அது கொடியவர்களின் கூடாரமாக ஆகிவிடக் கூடாது என்று பராசக்தி திரைப்படத்தில் அன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் வசனம் எழுதினார் அப்படி கோயில்களில் எந்த தவறுகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் தலைவர் கலைஞர் அவர்கள் எந்த அளவுக்கு மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயல்பட்டார் என்பதை உணர்ந்து இன்றைக்கு திராவிட மாடல் அரசு அதே வழியில் பின்பற்றிக் கொண்டிருக்கிறது என்பதை நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். தலைவர் கலைஞருடைய ஆட்சிக்காலம் என்பது அனைத்துத் துறைகளிலும் பொற்காலமாக இருந்ததைப் போலவே, இந்து சமய அறநிலையத் துறையிலும் இன்றைக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

நான் பெருமையோடு சில செய்திகளை, சாதனைகளை பட்டியலிட விரும்புகிறேன். நம்முடைய கழக ஆட்சி மலர்ந்த பிறகு, திருக்கோயில்களுக்கு ஏராளமான திருப்பணிகள், வல்லுநர் குழுவின் ஆலோசனைப்படி செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழமையான கோயில்களை, பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன. திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் எல்லாம் செய்யப்படுகின்றன. தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Latest Videos

click me!