கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, பல்வேறு வகைகளில் திமுக தங்களுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், விரைவில் உண்மை வெளிச்சத்துக்கு வரும் எனக் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பிரிவு மேலாண்மைச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.