திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளையும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முரண்டு பிடித்து வருகின்றனர். இதனை திமுக தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தவெக கூட்டணிதான் பெஸ்ட் சாஸ் என பலரும் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணிதான் சிறந்தது என அறிவுறுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘‘சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டணியில் சேர விரும்பாதவர்களை வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசின் அடக்குமுறையினால் பாதிக்கப்படாத அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறுகிற அளவிற்கு அவர்களது நடவடிக்கை அமைந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விஷயங்களை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். கொள்கை சார்ந்த மதவாத, வகுப்புவாத சக்திகளை தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத அளவிற்கு தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.