எடப்பாடி பழனிச்சாமியின் ஆணவப்போக்கால் அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து வெடித்து வருகிறது. முக்கியமான சீனியர் நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி மீது கடும்அதிருப்தியில் இருந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக – பாஜக கூட்டணி முடிவான பின் பல முக்கிய நிர்வாகிகள் கூட்டணி குறித்து மனம் நொந்து கிடக்கின்றனர். சமீபத்தில் முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா திமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன் திமுகவில் இணைந்தார்.
பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர், திமுகவில் தொடர்ச்சியாக இணைந்து வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் அதிமுகவினர் தொடர்ந்து திமுவில் இணைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருந்து வருகிறார் முன்னாள் மூத்த அமைச்சர் செங்கோட்டையன். எடப்பாடி பழனிசாமியின் முடிவுகள் குறித்து மூத்த அமைச்சர்களிடம் தனது அதிருப்தியை தெரிவித்து புலம்பி வந்துள்ளார். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் செங்கோட்டையனின் நிலைப்பாட்டிற்கு ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் தனக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் புறக்கணிக்கிறார் என்று திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனை அடுத்து, செப்டம்பர் 5ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக பரபரப்பை கிளப்பி உள்ளார்.