
பணி வழங்கப்படாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வறுமையையும், மன உளைச்சலையும் அனுபவித்து வருகின்றனர். தூய்மைப் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 150-ஆம் நாட்களாக தொடர்கிறது.
சென்னை மாநகராட்சியின் இராயபுரம் மண்டலத்தில் உள்ள 50-ஆம் வட்டத்தில் தூய்மைப் பணிகள் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால், கடந்த 5 மாதங்களாக பணியும், ஊதியமும் வழங்கப்படாமல் வறுமையிலும், மன உளைச்சலிலும் வாடி வந்த தூய்மைப் பணியாளர் ரவிக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களில் குப்பைகளை அகற்றும் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால் பணி வழங்கப்படாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் எத்தகைய வறுமையையும், மன உளைச்சலையும் அனுபவித்து வருகின்றனர் என்பதற்கு ரவிக்குமார் தற்கொலை சிறிய எடுத்துக்காட்டு.
தூய்மைப் பணி தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதைக் கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் 150-ஆம் நாளை நெருங்கும் போதிலும், அவர்களின் கோரிக்கையை திமுக அரசு ஏற்க மறுப்பதற்கு காரணம் ஒப்பந்தத்தைப் பெற்ற நிறுவனங்களிடமிருந்து கிடைத்த வெகுமதிகள் தான் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நிறுவனங்களிடமிருந்து ஆட்சியாளர்களுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் துப்புரவு பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ₹276 கோடி ஒப்பந்தம் வழங்கியதற்கு எதிராக போராட்டம் ஆகஸ்ட் முதல் தொடங்கியது. ரிப்பன் மாளிகை முன்பு 13 நாட்கள் தொடர் போராட்டம் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் போராட்டம் தொடர்ந்தது. பணி நிரந்தரம் கோரி ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
டிசம்பர் 12ம் தேதி காமராஜர் சாலை, தலைமை செயலகம் அருகே மறியல் போராட்டம் – 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 19ம் தேதி மண்டலம் 5-ல் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர் ரவிகுமார், 4 மாதங்கள் வேலை இல்லாமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
அரசு சார்பில் சில நலத்திட்டங்களான ஓய்வறை, உபகரணங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும், முக்கிய கோரிக்கைகள் நிறைவேறவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர், ஆனால் தோல்வியடைந்தன. முதலமைச்சர் ஸ்டாலின் சில நலத்திட்டங்களை அறிவித்தார், ஆனால் போராட்டம் முழுமையாக தீர்ந்துவிடவில்லை.
தூய்மைப்பணியாளர்கள் தனியார் மயமாக்கல் ஒப்பந்தங்களில் கமிஷன், லாபம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் சேகர்பாபுவின் நெருக்கமானவர்களுக்கு சென்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், தூய்மை பணியாளர் ஒருவர் பகீர் குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார்.
‘‘தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தை ராம்கி நிறுவனம் மூலம் கனிமொழி பெற்று இருப்பதாக கூறுகிறார்கள். இதில் சேகர் பாபுக்கு தான் முழுக்க முழுக்க பங்கு போகிறது. எங்களை ரூ.250 கோடிக்கு விற்று விட்டோம் என்று சொல்கிறார்கள். எதற்கு விற்கிறீர்கள்? நாங்கள் யார் உங்கள் சொத்தா? எங்களுக்கு கீழ் தான் நீங்கள் வேலை செய்ய வேண்டும். உங்களுக்கு கீழ் நாங்கள் வேலை செய்ய அவசியம் கிடையாது. எங்களை எப்படி நீங்கள் விற்று விடுவீர்கள். அவர்கள் சொல்கிறார்கள், உங்களையெல்லாம் நாங்கள் எப்போதோ விற்று விட்டோம். நீங்கள் போங்க... என்கிறார் சேகர் பாபு. இங்கே இருக்கிறாரே குமரகுருபரன், கமிஷனர். அவர் எங்களை எல்லாம் மதிப்பதே கிடையாது. குப்பை அள்ளுபவர்களிடம் எல்லாம் நாங்கள் பேசவே மாட்டோம் என்று சொல்கிறாராம்.
நாங்கள் குப்பை அள்ளவில்லை என்றால் இந்த நாடு சுத்தமாக இருக்க முடியுமா? ஒன்று எங்களுக்கு தொகுப்பு ஊதியம் போடுங்கள். இல்லை என்றால் நிரந்தர பணி உத்தரவு கொடுங்கள். அப்போதுதான் நாங்கள் இங்கே போராட்டத்தில் இருந்து எழுந்திருப்போம். இல்லை என்றால் ஒவ்வொரு தூய்மை பணியாளர்களும் என்ன செய்வார்கள் என்றே தெரியாது. அவ்வளவு வெறுப்பில் இருக்கிறோம். எல்லோரும் தற்கொலை முயற்சி செய்து சேகர்பாபு, மேயர் பிரியா, மு.க.ஸ்டாலின் மீது எல்லோரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்யப் போகிறோம்’’ என எச்சரித்துள்ளனர்.
அமைச்சரில் இருந்து, கமிஷனர் வரை ஒப்பந்தம் கொடுத்ததில் பங்கு இருக்கிறது.நாப்கின்னிலும், ரத்தத்திலும், டயபர்களிலும் எல்லாத்திலும் கைவைத்து ஜனங்களை கொரோனா காலத்தில் காப்பாற்றியவர்கள். அவர்களை நடுத்தெருவில் நிற்கவைத்து போராட்டடத்தை கண்டுகொள்ளவில்லை என்றால் இந்த அரசுக்கு எவ்வளவு ஆணவம் இருக்க முடியும்? பத்துல இருந்து 20 வருஷம் இந்த வெய்யிலிலும், வேர்வையிலும் ரத்தம் சிந்தி உட்கார்ந்து இருக்கிறோம்.
நாங்கள் சவால் விடுகிறோம், அமைச்சரையோ, மேயரையோ, துணை மேயரையோ, கமிஷனரையோ இந்த வெய்யிலில் வந்து ஒரு நாள் உட்காரச் சொல்லுங்கள் பார்க்கலாம்? நாங்கள் தகுந்த பாடம் புகட்டுவோம். நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்து பாருங்கள். ரவுடிகளை வைத்து மிரட்டுங்கள், கவுன்சிலர்களை வைத்து மிரட்டுங்கள். முடிந்தால் எங்களை அடிப்பதற்கு கூட முயற்சி பண்ணுங்கள். போலீஸை வைத்து லத்தி சார்ஜ்கூட செய்யுங்கள், துப்பாக்கியைக்கூட எடுத்துக்கொண்டு வாங்க. நீங்க எது செய்தாலும் சென்னையில் எங்கள் போராட்டம் தொடரும்’’ என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.