திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மனோஜ் பாண்டியன் இணைவது திமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் உத்தியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தென்தமிழகத்தில் திமுகவின் செல்வாக்கை வலுப்படுத்தும்.
பி.எச்.பால் மனோஜ் பாண்டியனுக்கு வழக்கறிஞர், அரசியல்வாதி, முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி என பல்வேறு முகங்கள் உண்டு. 2001 தேர்தலில் சேரன்மகாதேவி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2010 முதல் 2016 வரை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.
மனோஜ் பாண்டியன் 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று சென்னையில் பிறந்தார். இவர் ஒய்.எம்.சி.ஏவின் முதல் பொதுச் செயலாளர் ராவ் சாஹிப் ஜி.சாலமனின் பேரனும், தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் (1984-89) சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மகனும் ஆவார். அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பி.எல், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எல் சட்டப் படிப்பை முடித்தார். வழக்கறிஞராக தொழில் செய்து வந்த இவர் அரசியல் பணியிலும் களமிறங்கினார்.