
அமைச்சர் கே.என்.நேரு மீது ஊழல் வழக்கில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யுமாறு அமலாக்கத்துறை காவல்துறைக்கு வலியுறுத்தி வரும் நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் முதலீடு செய்ய, அமைச்சர் நேரு தரப்பில் பேச்சு நடந்ததாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணி நியமனங்களில் அமைச்சர் கே.என்.நேரு தனது உறவினர்கள் மூலம், ₹1,020 கோடி கொள்ளையடித்துள்ளதற்கு பல நேரடி ஆதாரங்கள் இருப்பதாக அமலாக்க இயக்குநரகம், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு மீண்டும் கடிதம் எழுதி, அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி இருந்தது.
அந்தக் கடிதத்தில், இந்த முறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையால் வழங்கப்பட்ட டெண்டர்களில் ஒப்பந்ததாரர்களிடமிருந்து மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை அமைச்சர் தனது உறவினர்கள் மூலம் வசூலித்ததாக ED குற்றம் சாட்டியுள்ளது.நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள், அமைச்சர் கே.என். நேருவின் உதவியாளர்களுக்கு ஒப்பந்த மதிப்பில் 7.5% முதல் 10% வரை கொடுத்துள்ளனர். இது "கட்சி நிதியாக" வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த வழியில் ₹1,020 கோடி லஞ்சமாகவும் கட்சி நிதியாகவும் வசூலிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 252 பக்க ஆவணத்தை அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது. அமலாக்கத்துறையிடம் இருந்து அரசாங்கத்திற்கு இதுபோன்ற எந்தத் தகவலும் கிடைத்ததாகத் தனக்குத் தெரியாது என்றும், ஆவணங்கள் தன்னைச் சென்றடையும் வரை தான் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் நேருவைத் தொடர்பு கொண்டபோது, அமலாக்கத்துறையிடமிருந்து மாநில அரசுக்கு 36 நாட்களில் இரண்டாவது முறையாக இது போன்ற தகவல் தொடர்பு அனுப்பப்பட்டது. அக்டோபர் 27 அன்று, நகராட்சி நிர்வாகத்துறை வேலைக்காக பண மோசடி நடந்ததாகக் கூறி தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதியது. இந்த ஊழல் குறித்து விசாரிக்க முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு தமிழக அரசை அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யாவிட்டால், அது "குற்றம் சாட்டப்பட்டவர்கள் லஞ்சம் வசூலிப்பதற்குத் தெரிந்தே காவல்துறையும் உதவுவது போலாகும்" என்றும் எச்சரித்து இருந்தது.
இது குறித்து விளக்கம் அறித்திருந்த கே.என்.நேரு, ‘‘என் சகோதரர் 2013ல் வாங்கிய கடனை வைத்து போடப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் எந்த குற்றமும் நடக்கவில்லை என ரத்து செய்து விட்டது அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையையும் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சும் ரத்து செய்து விட்டது. ஆனாலும் அமலாக்கத்துறையை மீண்டும் மீண்டும் அவதூறுப் பிரசாரத்தில் ஈடுபடச் சொல்லி மத்திய பா.ஜ.க. அரசு நிர்பந்திக்கிறது. என் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி எதிர்கொள்ள இருக்கிறேன். பா.ஜ.க. அரசின் தூண்டுதலில் அரசியல் பிரசாரத்தில் ஈடுபடும் அமலாக்கத்துறைக்கோ அல்லது அதிமுக- பா.ஜ.க. கூட்டணியின் அவதூறுப் பிரச்சாரத்திற்கோ அஞ்சமாட்டேன்’’ என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், திமுக எம்.பி.,யும், கே.என்.நேருவின் மகனுமான அருண் நேரு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்துப்பேசியது விவதாங்களைக் கிளப்பியது. இந்த சந்திப்பு, அருண் நேருவின் தந்தை கே.என். நேரு மீதான அமலாக்கத்துறையில் ரூ.1,020 கோடி ஊழல் வழக்கு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் நிகழ்ந்ததால் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வேறு சில கோரிக்கைகளுக்காவே மடததிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசியதாக கூறினார் அருண் நேரு.
ஆனால், இந்தச் சந்திப்பு அமலாக்கத்துறைகடிதத்துக்கு சில நாட்களுக்குப் பின் நடந்ததால், அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் போன்ற எதிர்க்கட்சிகள் இதை ‘பயந்து பாஜக-வை சந்தித்தது’ என்று விமர்சித்துள்ளன. இது அருண் நேரு, நிர்மலா சீதாரமனை சந்திப்பது முதல் முறை அல்ல. டிசம்பர் 2024-ல், இதே போன்று கே.என்.நேருவின் அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அருண் நேரு, நிர்மலா சீதாராமனை சந்தித்துப்பேசியுள்ளார்.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் முதலீடு செய்ய, அமைச்சர் நேரு தரப்பில் நடந்த பேச்சு குறித்து, அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஊழல் விவகாரம் குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சமீபத்தில், அமைச்சரின் தம்பி ரவிச்சந்திரன், இத்தாலி சென்றுள்ளார். அங்கு பல கோடி ரூபாய் சட்ட விரோதமாக முதலீடு செய்வது தொடர்பாக சிலரை சந்தித்து பேசி உள்ளார். அமைச்சர் கே.என்.நேரு துறையில், பல கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்து தருவதாக, நான்கு கம்பெனிகளைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களிடம், பணம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. ரவிச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியாக வலம் வந்தவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளனர்.
வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அமைச்சர் கே.என்.நேரு முன்பு அமலாக்கத்துறை நடவடிக்கை தீவிரமாகிவிடும் என்கிறார்கள் அரசியல் விமர்ச்கர்கள்.