Published : Sep 18, 2025, 09:32 PM ISTUpdated : Sep 18, 2025, 11:58 PM IST
அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அபகரித்தார். எடப்பாடி பழனிசாமியை பாஜக அபகரித்துவிட்டது. அதிமுகவையே பெற்றெடுத்த இயக்கம் திமுக. அப்படிப்பட்ட அந்த தாய் இயக்கத்தை வழிநடத்தக்கூடிய ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்திருக்கிறேன்
அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் நமது அம்மா, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ்களின் முன்னாள் ஆசிரியரும், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவருமான மருது அழகுராஜ். அவரை தவெகவிற்கு தள்ளிக் கொண்டு போவார்கள் என நினைத்து கொண்டிருக்கும் போது அறிவாலயம் அள்ளிக் கொண்டு போயிருக்கிறது.
மருது அழகுராஜ், அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது எம்.ஜி.ஆர்' மற்றும் 'நமது அம்மா' நாளிதழ்களின் தலைமை ஆசிரியராக இருந்தவர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ‘லேடியா? இந்த மோடியா’ மக்களால் நான் மக்களுக்காக நான்..’ போன்ற வாசகங்களை எழுதிக் கொடுத்தவர். 2021 சட்டமன்றத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் ஓ.பி.எஸ் அணியின் மாநில கொள்கைப் பரப்புச் செயலாளராக செயல்பட்டார்.
23
எடப்பாடி பக்கம் போகமாட்டோம்
பாஜக தனித்து களமிறங்கினால் அதிமுக வாக்குகளைப் பெற ஓ.பி.எஸ் தேவை எனத் தெரிவித்தவர். அண்ணாமலையின் நடைபயணத்தை விமர்சித்து, பாஜகவின் வாக்கு வங்கி உண்மையில் உயரவில்லை என வாதிட்டவர். எடப்பாடி பழனிசாமியை ‘சர்வாதிகாரி’ என விமர்சித்து, "விஷம் குடித்துச் செத்தாலும் எடப்பாடி பக்கம் போகமாட்டோம்" என ஆவேசமாகப் பேசியவர். ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சர் பதவியில் அமர்த்தியதை நினைவூட்டி, எடப்பாடியின் பழிவாங்கலை விமர்சித்தவர்.
அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் ஏற்பட்டால் மக்கள் காரித்துப்பி விடுவார்கள் என எச்சரித்தவர்.
33
அதிமுகவையே பெற்றெடுத்த இயக்கம் திமுக
இந்நிலையில் சமீபகாலமாக அவர் தவெகவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தார். ஆகையால் அவர் தவெகவில் இணையலாம் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ‘‘அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அபகரித்தார். எடப்பாடி பழனிசாமியை பாஜக அபகரித்துவிட்டது. அதிமுகவையே பெற்றெடுத்த இயக்கம் திமுக. அப்படிப்பட்ட அந்த தாய் இயக்கத்தை வழிநடத்தக்கூடிய ஸ்டாலின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்திருக்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
’காவி அடி... கழகத்தை அழி!’ என அவர் எழுதிய கவிதை வரியை போல கழகத்தை (அதிமுக) அழிக்க புறப்பட்டுவிட்டாரோ! என உற்சாகமாகியுள்ளனர் உடன்பிறப்புகள்.