சவுதி அரேபியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை தற்போதைய பிராந்திய பதட்டங்களுக்கு பதிலளிப்பதாகவும், அவர்களின் நீண்டகால முக்கிய கூட்டாண்மையின் உச்சக்கட்டமாகவும் சீன நிபுணர்கள் கருதுகின்றனர். ஷாங்காய் சர்வதேச ஆய்வுகள் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு ஆய்வுகள் நிறுவனத்தின் பேராசிரியர் லியு ஜாங்மின், "இந்த ஒப்பந்தத்தின் முக்கிய விதி - ஒருவர் மீதான தாக்குதலை இருவரின் மீதான தாக்குதலாகக் கருதுவது. முறையான கூட்டணி ஒப்பந்தங்களில் வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதங்களைப் போன்றது. சவுதி அரேபியாவைப் பொறுத்தவரை, இது அதன் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையைக் குறிக்கிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இது இந்தியாவிற்கு ஒரு எதிர் சமநிலையாகவும் செயல்படுகிறது" என்கிறார்.
லான்சோ பல்கலைக்கழகத்தில் உள்ள பெல்ட் அண்ட் ரோடு ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஜு யோங்பியாவோ, ‘‘கத்தார் மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. ஆனாலும், இந்த ஒப்பந்தம் அந்த சம்பவத்திற்கு நேரடியான பதிலாகக் குறைவாகவும், பல்லாண்டுகளாக நிலவும் நெருங்கிய சவுதி-பாகிஸ்தான் உறவின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. சவுதி அரேபியா நீண்ட காலமாக பாகிஸ்தானுக்கு பொருளாதார, கலாச்சார மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. எனவே, இந்த ஒப்பந்தம் ஒரு நெருக்கடியின் விளைவாக இல்லை. மாறாக இரு நாடுகளுக்கும் இடையிலான பல்லாண்டு கால நட்பு, சகோதரத்துவம் மற்றும் உறவுகளை பிரதிபலிக்கிறது’’ என்கிறார்.