
ஒரு பக்கம் நேபாள் வன்முறை, இன்னொரு பக்கம் மணிப்பூர் இதற்கிடையில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் என பரபரப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டு அரசியல் விவகாரங்களையும் கவனித்து வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். ஏன்றால் 2026ல் தமிழ்நாட்டின் வலுவான சக்தியாக பாஜக இருக்க வேண்டும் என்கிற திட்டத்தில் இருக்கிறது பாஜக. அதனால் தமிழக நிலவரத்தை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார் அமித் ஷா.
டிடிவி.தினகரன் பேசி வரும் விஷயங்களையும் கவனிக்காமல் இல்லை. கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டு இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியை மாற்றினால்தான் நாங்கள் மறுபடியும் கூட்டணிக்கு வருவோம் எனச் சொல்வதையெல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இதையொட்டி சில கணக்குகளை போட்டு வைத்து இருக்கிறார் அமித் ஷா
முதலாவதாக அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தேர்தலுக்கு நல்லது தான், மறுப்பதற்கு இல்ல. அதேவளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் விட்டுவிட விரும்பவில்லை. இருக்குற பிளேயர்ஸ்லேயே பெட்டர் பிளேயர் எடப்பாடி தான். அவரை வைத்து தான் பாஜகவும் நான்கு எம்எல்ஏக்களை பெற்றது. அதிகமுகவுக்கு அதிக எம்எல்ஏக்களை வெற்றிகரமாக கொண்டு வந்தது எடப்பாடி மட்டும்தான். அதனால அந்த படகில் ஏறி சவாரி செய்துதான் டார்கெட்டை இப்போதைக்கு அடைய முடியும். அவருடைய நகர்வுக்கு எதிராக எதையும் பாஜக செய்ய விரும்பவில்லை.
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் பிரதமர் மோடி இங்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமியை மட்டும்தான் சந்தித்தார். கூட்டணிக்கு வந்த பிறகு வேறு யாரையும் அவர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதே போல அமித் ஷா வந்தபோதும் யாருக்கும் நேரம் ஒதுக்கவில்லை. செங்கோட்டையன் விவகாரத்திலும் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டார் அமித் ஷா. எந்தவிதமான பாசிட்டிவான சிக்னலை அமித் ஷா கொடுக்கவில்லை. அனுசரித்து, இணைந்து பயணியுங்கள். முதலில் உங்களுடைய கட்சிக்குள் பொது செயலாளரோடு இணைந்து பயணியுங்கள் என்கிற ரீதியில் தான் அட்வைஸ் கொடுக்கப்பட்டது .
மிக முக்கியமான தலைவரான மறைந்த ஜி.கே.மூப்பனாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில் அனைவரையும் ஒரே மேடையில் அமர்த்திவிட வேண்டும் என பெரும்பாடுபட்டர் ஜி.கே.வாசன். அந்த வகையில் டிடிவி தினகரனையும் அழைத்திருந்தார். ஆனால், தினகரன் வந்தால் நான் வரமாட்டேன் என எடப்பாடி தவிர்க்கவே, ரொம்ப தர்ம சங்கடத்தோடு டிடிவி.தினகரனிடம் இந்த தகவலை பகிர்ந்துள்ளார் ஜி.கே.வாசன். இது டிடிவி.தினகரனின் ஈகோவை உரசிப்பார்த்து விட்டது. இத்தனை ஆண்டுகளாக கூட்டணிக்காக இருந்த நம்மை விட்டுட்டு திடீரென இப்போது கூட்டணிக்கு வந்த எடப்பாடிக்கு இவ்வளவு முக்கியத்துவமா? என அதில் இருந்துதான் டிடிவி தினகரன் வெளியே போய் அட்டாக் செய்து வருகிறார்.
அதே நேரத்தில் டிடிவி.தினகரனின் நியாயங்கள், உணர்வுகளை புரிந்து கொண்டு அவரை சமாதானம் செய்யக்கூடிய வேலைகளையும் சில பாஜக தலைவர்கள் செய்து வருகிறார்கள். அடுத்து விஜயின் தவெக என்கிற அந்த ஒரு ஆப்ஷன் இருப்பதை வைத்துக் கொண்டு தான் இப்படி எல்லாம் ஒவ்வொருத்தரும் கேம் பிளே செய்கிறார்கள். தவெகவை வைத்து பயம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தவெக தனது பலத்தை இன்னும் நிரூபிக்கவில்லை. விஜயுடன் கூட்டணி சேர்ந்து வாக்குகளை பெறலாம். எம்எல்ஏக்களை பெற முடியுமா? என்பதையும் உணர்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரின் தவெக ரூட்டை கட் பண்ண வேண்டுமென்கிற வேலைகளிலும் இன்னொரு பக்கம் இறங்கி இருக்கிறது டெல்லி டீம் என சில தகவல்கள் வட்டமடிக்கிறது.
இறுதியாக எதற்குமே வழிக்கு வரவில்லை, கூட்டணி எல்லாம் இருக்க மாட்டோம் எனச் சொன்னால், எடப்பாடி பழனிசாமியை எந்த அஸ்திரத்தை ஏவி கூட்டணிக்கு கொண்டு வந்தார்களோ அப்படி சில பல அஸ்திரங்கள் அமித் ஷாவிடமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். அந்த அஸ்திரம் தானாகவே எல்லோரையும் இந்த கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடும். கட்டாயம் அமித் ஷா அவர்களை கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுவார் என பின்னணியை பகிர்ந்து கொள்கின்றனர் கமலாலயத்தைச் சேர்ந்த சீனியர்கள்.