
விழுப்புரம், விருத்தாச்சலம், ரிஷிவந்தியம் இந்த மூன்று முக்கிய தொகுதிகளில் விஜய்க்கான ரசிகர் பட்டாளங்கள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதிகள். பெரும்பான்மையை தீர்மானிக்கக்கூடிய அடர்த்தியான வகையில் வன்னியர் சமூகத்தினரும், பட்டியல் சமூகத்தினரும் உள்ளனர். இந்த இரண்டு சமூகங்களிடையே விஜய்க்கு ஒரு ஆழமான வேர் இருக்கிறது. இதை ஒட்டித்தான் அவருடைய முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி ‘வி’சாலையில் இடத்தை தேர்வு செய்ததற்கு இந்த அரசியலும் ஒன்று.
அந்த மாநாட்டு வெற்றி அவருக்கு சென்டிமென்டாக நிறைய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. இந்த விழுப்புரம் தொகுதியில் இந்த முறை முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம் தோற்ற தொகுதி. இங்கே வெறும் 14,868 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார் திமுகவைச் சேர்ந்த லட்சுமணன். இங்கே சி.வி.சண்முகம் தோற்றதற்கான முக்கியமான காரணம் நகர்புறத்தில் இருக்கக்கூடிய அடர்த்தியான இஸ்லாமிய சிறுபான்மையினருடைய வாக்குகள். அதனால்தான் அவர் இன்னொரு பக்கம் மைலம் தொகுதி பக்கம் போகலாமா என ஆலோசனைகள் ஓடிக்கொண்டிருப்பதாகத் தகவல்.
சிறுபான்மையினரிடம் ஒரு நல்ல மதிப்பு, ஆதரவு விஜய்க்கு இருப்பதாக தவெகவினர் நம்புகிறார்கள். அந்த வாக்குகளும், வன்னியர், பட்டியல் சமூகங்களுடைய வாக்குகளும் கரை சேர்த்து விடும் எனக் கணக்குப்போடுகிறது தவெக. ஆனாலும் இது ஒரு முக்கியமான ஸ்டார் தொகுதி. இதற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், திமுகவை சேர்ந்த இன்னொரு முன்னாள் அமைச்சர் பொன்முடியும் இந்த தொகுதியில் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
சி.வி.சண்முகம் தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி அடைந்திருக்கிறார். அதிமுக- திமுகவின் கோட்டை இது. அதனால் அவர்களுடைய இன்ஃப்ளூயன்ஸ் அதிகமாக இருக்கும். ரொம்ப முக்கியமான தொகுதி என்பதால் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்பதால் திமுகவும், அதிமுகவும் எதையும் செய்ய தயாராக இருப்பார்கள். அந்த இடத்தில் போய் மாட்டிக்கொள்ளக் கூடாது என்றும் கருதுகிறார் விஜய். நேரடியாக திமுக, அதிமுகவோடு போட்டி போடுவதை முதற்கட்டமாக தவிர்க்க நினைக்கிறார்.
பாஜக- காங்கிரஸ் போட்டியிடுகிற தொகுதியில் களமிறங்கினால்தான் நல்லது என்கிற ஒரு கணக்கும் இருக்கிறது. இதற்கடுத்து விருதாச்சலத்தில் ஒரு கண் இருக்கிறது. ஒரு சென்டிமென்டை புரிந்து வைத்திருக்கிறார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் 2006-ல் முதல் தேர்தலிலேயே அவரை எம்.எல்.ஏ ம் ஆக்கிய ஒரு தொகுதி. கேப்டன் வழியில் திரைப்படத்தை தொடங்கினவர் விஜய். அரசியலிலும் அவருடைய பாதையிலேயே தொடங்கினால் நன்றாக இருக்கும் என சென்டிமெண்டாக நினைக்கிறார் விஜய்.
அதற்கு அடுத்த தேர்தலில் வெற்றி அடைந்து எதிர்க்கட்சி தலைவராக அவருக்கு மரியாதை செலுத்திய தொகுதி ரிஷிவந்தியம். ஆனாலும் அங்கே இப்போது திமுகவின் வசந்தம் கார்த்திகேயன் வலுவாக இருந்து வருகிறார். அதனால் முதல் சாய்ஸ் விஜய்க்கு விருதாச்சலம் தான். அது மட்டும் இல்லாது, இது பாமகவுடைய வலிமையான கோட்டை. கோவிந்தசாமி ஒரு டாக்டர். நல்ல மரியாதைக்குரியவர். அந்த ஏரியாவில் செல்வாக்கு பெற்றவர். அவரையே விஜயகாந்த் அவர் தோற்கடித்தார். இங்கே முக்கியமாக அடர்த்தியாக இருக்கின்ற வன்னியர் சமூக மக்கள் தாங்கள் சார்ந்த சமூகத்தை சேர்ந்த வேட்பாளர் என்று பார்க்காமல் விஜயகாந்தை வெற்றி பெற வைத்தார்கள். இதை முக்கியமாக பார்க்க வேண்டி இருக்கிறது.
முக்கியமாக கூட்டணியில் ஒருவேளை பாமக, தவெகவுடன் கூட்டணிக்கு வந்தால் இந்தத் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிடலாம். 2021- கூட வெறும் 862 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தார் பாமக வேட்பாளர் கார்த்திகேயன். ஆகையால் பாமகவின் ஆதரவு தனக்கு உதவும் என தவெக கருதுகிறது. அதனால் இந்தத் த்குதியும் ஒரு வாய்ப்பாக இருந்து வருகிறது.
கடலூர் கடல் பகுதிக்கு அருகில் இருக்கிறது. ஆகையால்சு அங்கே போட்டியிடலாம், கை கொடுக்கும் எனவும் நினைக்கிறார்கள். ஆனாலும், அங்கே ஏற்கனவே நாதக தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் போட்டியிட்டு குறைந்த வாக்குகளையே பெற்றார். வெறும் 12,497 வாக்குகள். ஒரு புதிய வேட்பாளரின் மாற்று சக்திக்கு பெரிதாக அப்பகுதி மக்கள் கைகொடுக்கவில்லை. இதுவும் விஜய்க்கு யோசனையாக இருக்கிறது.
அடுத்து பக்கத்தில் இருக்கக்கூடிய தொகுதி, நம்பிக்கை கொடுக்கக் கூடிய தொகுதி நாகப்பட்டினம். அந்தத் தொகுதியைத் தான் டாப் லிஸ்டில் வைத்திருக்கிறது விஜய் தரப்பு.காரணம் அதுவும் கடலோரப்பகுதி. மீனவ சமுதாய மக்களுடைய வாக்குகள் அடர்த்தியாக இருக்கிறது. விஜயை அவர்கள ஆதரிப்பார்கள் என நினைக்கிறார்கள். ஏற்கனவே சர்க்கார் திரைப்படத்தில் கூட ‘ஆமா, நானும் மீனவன் தான்’ என ஒரு காட்சி வரும். அது ஒரு நெருக்கத்தை கொடுக்கும் என நம்புகிறார்கள். அதற்கு முன்னதாக ஈழத் தமிழர்களுக்காகவும், புயலால் பாதிக்கப்பட்டபோதும் மக்களுக்காக இங்கு அதிக அளவில் நாகப்பட்டினத்தில் கடலோர பகுதிகளில் கவனம் செலுத்திருக்கிறார்.
விஜய் சுறா படத்திலிருந்து கூட, ‘அமைதி திரும்பும்’ என்றெல்லாம் பேசி இருப்பார். மீனவராக நடித்திருக்கிறார். அதற்கு முன்னதாக வில்லு படத்தில் ‘அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்’ என பாடல் வரி இடம்பெற்று இருந்தது. இந்த நெருக்கம் எல்லாமே அந்த அனைத்து தரப்பு மக்களிடமும் அடித்தளம் போட்டு இருக்கும், இது எல்லாமே கை கொடுக்கும் எனக் கருதுகிறார்கள். சிறுபான்மையினர் அடர்த்தியாக இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் வாழும் நாகூர் இருக்கிறது. பக்கத்திலேயே வேளாங்கண்ணி கோயில் இருக்கிறது. இவை எல்லாமே சென்டிமென்டாக கைகொடுக்கும் என நினைக்கிறார்கள்.
அங்கு விசிக கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் சட்டமன்ற உறுப்பினர். சென்னையில் இருந்து ஒரு வேட்பாளர் அங்கே சென்று வெற்றியும் அடைந்திருக்கிறார். இதுவும் விஜய் தரப்புக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனாலும் அங்கே எதார்த்தத்தில் கள நிலவரம் வேறு மாதிரி இருக்கிறது. அங்கே மீனவ சமுதாயத்தினருடைய வாக்குகள் என்று பார்த்தால் சுமார் 15,000 வாக்குகளுக்கும் குறைவு. அதற்கு அடுத்து சிறுபான்மையினருடைய வாக்குகள், இஸ்லாமியர்களுடைய வாக்குகள் அங்கு கணிசமாக இருக்கிறது.
தற்போது பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் அந்த வாக்குகளை அவர்கள் வீணாக்க விரும்ப மாட்டார்கள். அதனால்தான் சென்ற முறை திமுக இல்லாமல் அவர்களுடைய கூட்டணி கட்சியான விசிக அவர்கள் வெற்றி பெற வைத்ததற்கு காரணம். அவரை எதிர்த்து போட்டியிட்ட தங்க கதிரவன் வெறும் 7,258 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதற்கு முக்கியமான காரணம் நகர்புறத்தில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களுடைய வாக்குகள். இந்த முறை அதை சரிக் கட்டக்கூடிய வேலைகளையும் தீவிரமாக செய்து கொண்டு வருகிறார். அங்கு செல்வாக்கு பெற்ற ஒரு வேட்பாளராக அதிமுகவில் இருக்கிறார்.
மேலும் கடந்த முறை கொரோனா சமயத்தில் வெளிநாட்டில் இருக்கக்கூடிய இஸ்லாமியர்களும், சிறுபான்மையினர்களும் இங்கே வந்து இருந்தார்கள். அதனால் அவர்கள் வாக்குப்பதிவு செலுத்தி இருந்தார்கள். வருகிற தேர்தலில் எந்த அளவுக்கு வெளிநாட்டில் இருக்கக்கூடியவர்கள் வந்து வாக்களிப்பார்கள் என்பது தெரியாது.நாதக சார்பில் போட்டியிட்ட அகஸ்டின் அற்புதராஜ் 9976 வாக்குகள் மட்டுமே பெற்று இருக்கிறார். ஆகையால் மீனவ சமுதாயத்தினர் வாக்குகளை மட்டும் நம்பி வந்தால் அது நினைத்த ஒரு வெற்றியை கொடுத்துவிடுமா? என்பது கேள்விக்குறிதான்.
அருகில் இருக்கக்கூடிய வேளாங்கண்ணிக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய வேதாரண்யம். அங்கே வலிமையான வேட்பாளர்கள் அதிமுகவில் முன்னாள் அமைச்சரான ஓ.எஸ்.மணியன். இந்த பக்கம் போனாலும் பண்ருட்டி, ஜெயங்கொண்டம், அரியலூர், குன்னம் இப்படி பல்வேறு தொகுதிகள் இருந்தாலும் இதெல்லாம் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இன்னொரு பக்கம் தவாக வேல்முருகன் என செல்வாக்கு செலுத்தக்கூடிய அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள். இது எல்லாமே டஃப்பாக இருக்கும் என யோசிக்கிறார்கள்.
தூத்துக்குடி தொகுதி. திமுகவின் கோட்டை. அங்கே அமைச்சர் கீதா ஜீவன் இருக்கிறார். திமுகவின் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழியில் நாடாளுமன்றத் தொகுதிக்கும் வரும் பகுதி. அங்கே கனிமொழியும் செல்வாக்குடையவராக இருக்கிறார். ஆனாலும்கூட, தூத்துக்குடி கடலோர மாவட்டமாக இருக்கிறது. அங்கே அதிக அளவிலான அந்த கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். சிறுபான்மையினர் வாக்காளர்களும் அங்கு அதிகமாக இருக்கிறது. விளிம்பு நிலை மக்கள், எளிய மக்களும் அதிகமாக இருக்கிறார்கள்.
விஜய்க்கும் தனிப்பட்ட வகையில் தூத்துக்குடியில் செல்வாக்கான ஒரு பகுதி. அங்கே அவருக்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது. தூத்துக்குடி, கீதா ஜீவன் போட்டியிட்டு வெற்றி அடைந்த தொகுதி. 92,314 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். 50 ஆயிரத்து 310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தாலும் அமைச்சர் கீதா ஜீவன் மீதும், ஆளும் திமுக அரசு மீதும் இருக்கக்கூடிய அதிருப்தி இருக்கிறது.
அப்பகுதிகளில் அதிக அளவில் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விஷயங்களை எல்லாம் கையில் எடுத்து களமாடலாம். இவை எல்லாமே ஸ்கோர் செய்ய உதவும், கை கொடுக்கும் எனக் கருதுகிறார்கள் விஜய் கட்சி நிர்வாகிகள். ஆக மொத்தத்தில் இந்த தொகுதிகளில் இருந்துதான் விஜய் போட்டி போடப் போகிறார் எனச் சொல்ல முடியாது. 234 தொகுதிகள் இருக்கிறது. அவர் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதற்குத்தான் ஸ்கெட்ச் போட்டு மதுரை மாநாட்டையும் பிரம்மாண்டப்படுத்த தீவிரமாக வேலை பார்த்து வருகிறோம். சூழலுக்கு ஏற்ப, கூட்டணிக்கு ஏற்ப விஜய் போட்டியிடும் தொகுதி மாறுபடலாம்’’ என்கிறார்கள் தவெகவில் முடிவுகளை தீர்மானிக்கக்கூடிய சில முக்கியமான நிர்வாகிகள்.