
மகன் மு.க.முத்து தொடங்கி பேரன்கள் உதயநிதி, துரை தயாநிதி, அருள்நிதி வரை கருணாநிதியின் குடும்பத்து வாரிசுகள் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர். ஏன்? மு.க.ஸ்டாலின் கூட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், குடும்ப அரசியல் செய்கிறார்கள்' என ஏற்கெனவே தி.மு.கவின் மீது இருக்கும் முத்திரை மீண்டும் வலுப்பெறும் வகையில் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியும் அரசியலுக்கு அச்சாரமாக சினிமாவில் ஹீரோவாக களமிறக்கப்படுகிறார்.
நடிகரும், துணை முதல்வருமான உதயநிதியின் மகன் இன்பநிதி, திரைத்துறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தராக அறிமுகமானார். ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இன்பநிதி பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், இன்பநிதி கூத்துப்பட்டறையில் நடிப்பு கற்றுக்கொள்ள சென்ற காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலானது. தற்போது, இன்பநிதி தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்பநிதி கதாநாயகனாக அறிமுகமாக உள்ள படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயநிதி நடிப்பில் கடைசியான வெளியான ‘மாமன்னன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கி இருந்தார்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரப்போகும் இன்பநிதியின் இந்தப் பயணம், திட்டமிட்டு நடத்தப்படுகிறதா? அல்லது தற்செயலா என்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால், இந்தப் பயணத்தின் உச்சம் என்னவாக இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது. இன்பநிதி சினிமாவில் களமிறங்கப்போவது தி.மு.கவின் அடுத்த தலைவர் பதவிக்கான அச்சாரமாகக்கூட இருக்கலாம்' எனக் கணித்தால், அது தவறான கணிப்பாக இருக்காது. அதுவே திமுக அரசியல் வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்திருக்கும் பாடம்.
உதயநிதிக்கு கிடைத்திருக்கும் பதவி, தி.மு.கவிலேயேகூட சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புலம்பலாகவே புகைந்து கொண்டிருந்தது. அது அடங்கும் முன் இன்பநிதிக்கு மகுடம் சூட்ட தயாராகி வருகிறார்கள். குடும்ப அரசியல் என்பதை தி.மு.க மட்டும் செய்யவில்லை. இந்திய அளவில், ஏன் உலக அளவில்கூட தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை அடுத்தடுத்து பதவியில் உட்கார வைப்பது தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்படும் முறை மன்னராட்சி காலத்தில் இருப்பதுதான். தற்போது ஜனநாயகம் என்று கூறிக் கொண்டாலும் இன்றைய காலத்திலும் அது தொடரவே செய்கிறது.
இந்தப் போக்கு நியாயமானதா? இல்லையா என்பது விவாதத்திற்கு உட்பட்டது. ஆனால், உடனடியாக நாம் எழுப்ப வேண்டிய கேள்வி குடும்பப் பின்னணியை அடிப்படையாக வைத்து, பதவியில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் உதயநிதி குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியானவர்தானா? அந்தப் பதவிக்கு உரிய அரசியல் தெளிவும், களப்பணியும் அவரிடம் இருக்கிறதா? என்கிற விவாதங்களே தொடர்ந்து வரும் நிலையில் இன்பநிதியை மெல்ல களமிறக்கும் போக்கையும் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.
கருணாநிதியின் மறைவுக்குப் பின் தற்போது தி.மு.க தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு தி.மு.கவில் முந்தைய காலங்களில் அடுத்தடுத்த பொறுப்புகள் கொடுக்கப்பட்டபோது, கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் இது மிகப்பெரிய அளவில் விமர்சனமாக வைக்கப்படவில்லை. தி.மு.கவைக் கடுமையாக விமர்சித்த துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமி கூட `தி.மு.கவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வரலாம்' என்று கூறியிருந்தார். அதற்கு சோ முன்வைத்த காரணம், ஸ்டாலினின் தொடர் அரசியல் செயல்பாடுகள்.
மிசா காலத்தில் சிறை சென்றதிலிருந்து, தற்போதுவரை அவருடைய அரசியல் களப்பயணம் மிக நீண்டது. தற்போதும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆகையால், இயல்பாகவே அவர் தற்போது வகிக்கும் இடத்திற்குத் தகுதியானவராக மாறுகிறார்.
ஆனால், உதயநிதி..?! திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்ததற்கும், அரசியலில் இறங்கியதற்குமான இடைவெளி எவ்வளவு காலம் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. தேர்தல் சமயத்தில் தாத்தா கருணாநிதிக்காகவும், அப்பா ஸ்டாலின் உள்ளிட்ட குறிப்பிட்ட சில வேட்பாளர்களுக்காகவும் சுற்றுப்பயணம் சென்று தி.மு.கவுக்காக பிரசாரம் செய்ததை மட்டும் வைத்துக் கொண்டு, அவருக்கு வெகுசீக்கிரமே கட்சியின் மிக முக்கியப் பதவியைக் கொடுத்தார்கள். வெகு சீக்கிரமே துணை முதல்வராக்கினார்கள். அவருக்கு கொடுத்த கால அளவைவிட வெகு சீக்கிரமே இன்பநிதியை தலைமையேற்க கொண்டு வந்துவிடத் துடிக்கிறார்கள்.
எது எப்படியோ, ஆண்டாண்டு காலமாக தி.மு.கவிற்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஓர் உடன்பிறப்பு வந்தடைய வேண்டிய இடத்தை வாரிசு என்பதாலேயே உதயநிதி அடைந்து விட்டார், அடுத்து அவரது மகன் இன்பநிதி அடையத்துடிக்கிறார் என்பது கட்சியினருக்கு எந்தளவுக்கு மிகப்பெரிய சோர்வைக் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதை அவர்கள் வெளியே காட்டிக் கொள்ள முடியாமல் இருப்பது இன்னும் சோகம்.
தி.மு.க தலைவராக இருந்து மறைந்த கருணாநிதியிடம் குடும்ப அரசியல் பற்றி பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். அதற்கு கருணாநிதி, "குடும்பம் என ஒன்று இருந்தால் அரசியல் செய்வார்கள்தான்" என்றார். தற்போதைய தி.மு.க தலைமையும் இன்பநிதிக்கு இதே பதிலைத்தான் சொல்லும் என்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை.