தமிழக மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையானது இன்று அதிகாலை 2 மணிவரை நீடித்தது. சுமார் 18 மணிநேரம் சோதனைக்கு பிறகு அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் வாகனத்தில் மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வீட்டில் இருந்து வெளியே அழைத்து செல்ல முயன்றனர்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. காரில் படுத்துக் கொண்டே வலியால் கதறினார். இதனையடுத்து, அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு 6-வது மாடியிலுள்ள ஐசியூ வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட இசிஜி நிலையாக இல்லை என அவரை சந்தித்த அமைச்சர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதயத்துடிப்பு, உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது சீராக உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி மயக்க நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.