
ஜவ்வாக இழுத்த கூட்டணி குழப்பங்களுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தொடர் தோல்வி . உட்கட்சி நெருக்கடி, டெல்லி அழுத்தங்கள், கூடி வராத கூட்டணி என எம்.ஜி.ஆர் மாளிகை ஏகத்துக்கு சோர்ந்து போயிருந்த நிலையில், கூட்டணி கட்சிகளை அறிவித்து கூடவே சீட்டுகளையும் சிதறவிட்டு தமிழகத்தில் முதல் ஆளாக கூட்டணி குதிரை ஏறி ஆக்சன் அவதாரம் எடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
எப்படி இந்த திடீர் மாற்றம்? இதுகுறித்து அதிமுக உள்விவகாரம் அறிந்த மூத்த நிர்வாகிகள் கூறும்போது, ‘‘அதிமுக, பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு முதல் கட்ட பேச்சுவார்த்தைக்காக கடந்த டிசம்பர் 23ஆம் தேதி சென்னை வந்தார் பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயல். அன்று காலை கமலாலயத்தில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டத்தை நடத்தி கள நிலவரம், கட்சி நிலவரம் பற்றி கேட்டறிந்த பியூஸ் அன்று மதியமே எடப்பாடி பழனிசாமியை தனியாக நட்சத்திர விடுதியில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு முன்பே திட்டமிடப்பட்ட ஒன்றுதான். அதனால் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி உள்ளிட்ட முக்கிய புள்ளிகளை முந்தைய நாள் இரவே அழைத்த எடப்பாடி அவர்களிடம் சில கண்டிஷன்கள் போட்டுள்ளார். பாஜக மேலிட பொறுப்பாளரை மாற்ற வேண்டும் என்று நாம் கேட்டதால் தான் பாண்டாவை மாற்றிவிட்டு பியூஸ் கோயலை பாஜக தலைமை போட்டிருக்கிறது. நாளைக்கு பியூஸ் கோயலுடன் பாஜகவுக்கு எவ்வளவு சீட்டுகள் என பேசப்போகிறோம். உங்களில் சிலர் பியூஸ் கோயலுடன் நட்பாய் இருக்கலாம். ஆனால் அது எந்த வகையிலும் சீட்டு பங்கீடு உள்ளிட்ட கட்சி விஷயங்களில் எதிரொலிக்க கூடாது.
எனக்கு தெரியாமல் எந்தவித சந்திப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி இருக்கிறார். நாளைக்கு சந்திக்கும் போது நாம சில பல அரசியல் கணக்குகள் இருக்கின்றன என்பது வேறு கதை. சந்திக்கும் போது நாம தான் பேசணும். கூட்டணிக்கு நாம தான் தலைமை. நாம சொல்றதுதான் அவங்க கேட்கணும். அவங்க 60, 80, 100 என எவ்வளவு சீட்டு வேணுனாலும் கேட்கட்டும். ஆனால், நாம கொடுக்கிறது தான் சீட். அதை நான் பார்த்துக்கிறேன். இடையில் எதுவும் நீங்க பேச வேண்டாம் என்று சொல்லி தன் சகாக்களை தயார்படுத்தி இருக்கிறார் எடப்பாடி.
அதன்படி பியூஸ் கோயலுடன் மறுநாள் மீட்டிங் நடைபெற்றது. முதலில் அரசியல் நிலவரம், புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது பற்றி எல்லாம் விவாதித்த பியூஸ், தங்களின் சீட்டு எதிர்பார்ப்பு, தங்கள் கோட்டாவில் வரும் ஏசி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் உள்ளிட்டோருக்கு சீட் பங்கீடு உள்ளிட்டவற்றை மையப்படுத்தி லிஸ்டு ஒன்றை எடப்பாடியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அதை வாங்காத எடப்பாடி பதிலுக்கு தன்னிடம் இருந்த லிஸ்டு ஒன்றை கொடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த நான்கு தமிழக சட்டமன்றத் தேர்தல்களை ஆய்வு செய்த தெளிவான லிஸ்ட் இது. அதில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளும் அடக்கம். அதில் நீங்கள் கணிசமாக ஜெயித்தாலே போதும். நீங்க கேட்கும் இடங்களை எல்லாம் இப்போது அனலைஸ் செய்வது சரியாக இருக்காது என எடப்பாடி சொல்லி இருக்கிறார்.
அதிமுகவுக்கு 170 இடங்கள் பாஜக, பாகவுக்கு தலா 23 தேமுதிக மற்றும் அமமுகவுக்கு தல ஆறு, ஓபிஎஸ் மற்றும் தாமாகவுக்கு தலா மூன்று என்று குறிப்பிடப்பட்ட லிஸ்ட்டை கே.பி.முனுசாமி கையில் கொடுத்து பாஜகவிடம் கொடுக்க வைத்தார். அப்போது இது ஒன்றும் இறுதி பேச்சு வார்த்தை இல்லைங்க. அடுத்த சிட்டிங் உட்கார்ந்து கூடக் குறைய பேசிக்கலாம். அதே போல பாமக, தேமுதிக பற்றி நீங்க யோசிக்காதீங்க. ராஜ்யசபா சீட்டு விவகாரம் எல்லாம் இருக்கு. அவங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இனிமே நமக்குள்ள நடக்கப்போற கூட்டணி பேச்சுவார்த்தை எல்லாம் பாஜக டெல்லி சீனியர் புள்ளிகளுடன் மட்டும்தான் இருக்க வேண்டும். மற்றவர்கள் யாரும் இதில் தலையிடக்கூடாது என அடுத்தடுத்து போல்டாக போட்டு உடைத்திருக்கிறார் இபிஎஸ்.
அதன் தொடர்ச்சியாக மீண்டும் என்னை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என ஓபிஎஸ் பிடிவாதமாக கேட்கிறார். ஓபிஎஸ், சசிகலாவை கட்சியில் சேர்ப்பது பற்றி உங்கள் நிலைப்பாடுதான் என்ன என்று கேட்டிருக்கிறார் பியூஸ் கோயல். அதற்கும் எடப்பாடி கட் அண்ட் ரைட்டாக, ‘‘அது எங்கள் உட்கட்சி விவகாரம். ஓபிஎஸை பக்கத்தில் வைத்துக் கொண்டு என்னால் கட்சி நடத்த முடியாது. கூட்டணிக்கு வேண்டுமானால் அவர் ஓகே. அவர் எந்த தொகுதி கேட்பார் என்று எனக்கு தெரியும். அவருக்கு தரும் சீட்டிலேயே அவரது மகன்களுக்கும் பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். ஜெயிக்க வைக்கிற வேலை எங்களுடையது. சசிகலாவை பொருத்தவரைக்கும் அவர எங்களுக்கு எதிராகப் பேசுறதில்லை. அதனால் அவர் எங்களுக்கு பிரச்சனை கிடையாது.
அவர் பிரச்சாரமும் பண்ணலாம். அதே சமயம் எங்கள் தரப்பு முக்கியஸ்தர்கள் யாரும் அவருடன் பிரச்சாரத்துக்கு வரமாட்டார்கள் என சொல்லி இருக்கிறார் எடப்பாடி. இந்தத் தகவல் தெரிந்துதான் ஓபிஎஸ் தரப்பு உடனடியாக எடப்பாடி மீது அமிலத்தை வீச தொடங்கி இருக்கிறது. விஜய் கூட்டணி குறித்தும் அப்போது பேசப்பட்டுள்ளது.
எடப்பாடியோ விஜய் நமக்கு வேண்டவே வேண்டாம். அவருடன் நமக்கு செட் ஆகாது. இன்னும் சில கட்சிகள் நம்முடன் வருவார்கள். அதுவே மக்கள் மத்தியில் நாம்தான் வலுவான மாற்று சக்தி என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று சொல்லி தவெகவுக்கான கேட்டை இழுத்து சாத்தியிருக்கிறார் எடப்பாடி. இதுபோக இனி அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் தான் யாருக்கு எவ்வளவு சீட் என்பது இறுதியாகும்’’ என்று சொல்லி அந்த அதிமுக நிர்வாகி.
இதுகுறித்து அதிமுக நிர்வாகி சிவசங்கரி நம்மிடம், ‘‘இது உள்ளரங்கில் கூட்டணிக்காக பேசப்பட்ட விஷயம். திமுகவை ஆட்சியை விட்டு அகற்றுவதுதான் எங்கள் நோக்கம். எங்களுடன் கூட்டணியில் இருந்தவர்கள் மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள அதிகமாக இருக்கிறது. தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். ஏற்கனவே பகிரங்கமாக சொல்லிவிட்டோம். அன்றும் டிடிவி, ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் பற்றி எதுவும் பேசப்படவில்லை’’ என்றார்.
பாஜக எதிர்பார்த்தது 117 தொகுதிகள். அதாவது தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சரி பாதி. ஆனால், இதற்கு எந்த நிலையிலும் வாய்ப்பில்லை என்பதை டெல்லி பாஜக தெரிந்திருந்தாலும் அப்போதுதான் 100 ஆரம்பித்து 60-ல் முடியும் என்பது டெல்லி கணக்கு. இதை முன்கூட்டியே சுதாரித்துத்தான் அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிடப் போவதாகவும், பிற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பற்றிய விவரங்கள் அடங்கிய உத்தேச பட்டியல் அதிமுக தரப்பில் இருந்து கசிவிடப்பட்டது. இந்த தகவல் பாஜக தரப்புக்கு தெரியவந்து ஷாக் ஆகி டெல்லியை பைபாஸ் செய்கிறாரா எடப்பாடி? என கொதித்ததாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அதிமுகவுக்கு சாதகமான தொகுதிகளைத் தாண்டி, பாஜகவுக்கு சாதகமான தொகுதிகளையும் இப்போது அதிமுக தலைமை குறி வைத்திருக்கிறது. இதுவும் பாஜகவுக்கு இன்னொரு ஷாக். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அது துவக்கட்டம்தான். இறுதியானது அல்ல. ஜனவரி மாதம் தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் கூட்டணிக்கான அனைத்து முடிவுகளையும் பைனல் செய்யப் போகிறார். இத்தகவலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வேலுமணியிடம் நேரடியாகவே தெரிவித்துவிட்டார் என சொல்லப்படுகிறது. அப்போது பல முடிவுகள் மாறலாம் என பாஜக தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ் இடம் பேசிய பியூஸ் கோயலை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் எப்படியாவது சந்திக்க வேண்டும் எனக் காத்திருந்தார். ஆனால், அது நடக்கவில்லை. ஆனால், ஓபிஎஸ் போனில்தொடர்பு கொண்டு பியூஸ் கோயலுடன் பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போது ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கப் போவதாக சொல்ல, கோயல் ‘‘நீங்க தனிக்கட்சி துவங்குவதால் எதுவும் நடக்கப்போவதில்லை. எங்களுடன் சேர்ந்தால் உங்களுக்கு பலம். அரசியலில் பொறுமை அவசியம்’’ என தேற்றி இருக்கிறார்.