பொதுவாக, இதுபோன்ற தங்களது சொந்த நிலங்களை அரசு பயன்பாட்டிற்கு வழங்கும்போது, தனி நபர்களாக இருந்தால் அவர்கள் விரும்பும் குடும்பப் பெயர்களும், ஒரு கிராமம் அல்லது ஒரு சமுதாயமாக இருந்தால் அந்த சமுதாயம் விரும்பும் தலைவர்களின் பெயர்களும் சூட்டப்படுவது நடைமுறையாக உள்ளது. அதன் அடிப்படையில், சுதந்திர இந்தியாவில் மனித உரிமையை மீட்கவும், தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தும், தமிழ் மண்ணிற்காக தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகி இமானுவேல் சேகரனார். அவர்களின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவதே சாலப் பொருத்தமானதாகும். மேலும், அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும், ராணுவ வீரரும், எவ்விதக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத அப்பழுக்கற்ற மாமனிதரும் ஆவார்.
எனவேதான், மதுரை விமான நிலையத்திற்கு நிலம் தந்த சின்ன உடைப்பு மக்கள் மற்றும் தென் தமிழகத்தில் வாழுகின்ற இம்மண்ணின் மூத்த வேளாண் தமிழ்க் குடிகளான தேவேந்திர குல வேளாளர்களின் ஒருமித்த கருத்தும் ”மதுரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முனையங்களுக்கு ’தியாகி இமானுவேல் சேகரனார்’ அவர்களின் பெயர் சூட்டப்பட வேண்டும்” என்பதாகும்.
இந்தப் கோரிக்கையை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மதுரையை மையமாகக் கொண்டு பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன; 2011 முதல் 2016 வரையிலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலமுறை குரல் கொடுத்துள்ளேன். மேலும், மதுரை விமான நிலையத்திற்குப் பெயரிடுவது குறித்துப் பேச்சு எழும்போதெல்லாம், எவ்விதக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, ’பத்தரை மாற்றுத் தங்கம்’ தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் பெயரையே அனைத்துத் தரப்பினரும் முன்மொழிந்துள்ளனர்.