ஆனால் இபிஎஸ் தரப்பில் செங்கோட்டையனை கூண்டோடு காலி செய்ய வேண்டும் என கங்கணம்கட்டி அவரது ஆதரவாளர்கள் ஏழு பேரின் பொறுப்புகளையும் பறித்திருக்கிறார் இபிஎஸ். அதேபோன்று ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படும் வரை மாவட்ட கட்சி பணிகளை மேற்கொள்வதற்காக கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ-வை நியமித்திருக்கிறார். 2026 தேர்தலில் செங்கோட்டையனுக்கு சீட்டும் கொடுக்கக்கூடாது என முடிவெடுத்து இருக்கிறார்கள்.
இப்போது தனக்கு எதிராக களமாடியவர்களுக்கு ஜாக்பாட்டை கொடுத்து வருகிறார் இபிஎஸ் என்கிறார்கள். இது ஒரு பக்கம் போக ஈபிஎஸின் மகன் மிதுன் ஒரு பக்கம் காய் நகர்த்திக் கொண்டு இருக்கிறார். தர்மபுரி மாவட்டத்தில் இருந்து முன்னாள் எம்எல்ஏ சிங்காரம், ‘‘செங்கோட்டையனுக்கு எதிராக நாங்க தீர்மானம் ஏற்றுகிறோம்’’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு மிதுன் ‘‘அதெல்லாம் வேணாங்க. நீங்க புதுசா எதையும் கிளப்பாதீங்க. ஏற்கனவே அந்த மாவட்ட செயலாளர் கே.பி அன்பழகன் இருக்கிறார். அவர் பாத்துக்குவாரு. நீங்க இதுல தலையிடாதீங்க’’ என்று சொல்லி இருக்கிறார். அப்படி சொன்ன கையோடு கே.பி.அன்பழகனுக்கு போன் போட்டு, ‘‘அண்ணே... உங்க லிமிட்டுல 5 சட்டமன்ற தொகுதிகள் வருது. யாருக்கெல்லாம் எம்எல்ஏ சீட்டு கொடுக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? என்று ஒரு லிஸ்ட் அனுப்புங்க. பொதுச்செயலாளர் உங்ககிட்ட கேட்க சொன்னாரு’’ எனச் சொல்லி இருக்கிறார்.