கிருஷ்ணகிரி நகராட்சி 33 வார்டுகளைக் கொண்டது. இதில், திமுக கவுன்சிலர்கள் 22 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 5 பேரும் இருந்தனர். காங்கிரஸ், பா.ஜ.க கவுன்சிலர்கள் தலா ஒருவர் உள்ளனர். திமுக ஆதரவு சுயேட்சைக் கவுன்சிலர்கள் 4 பேர். நகராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த பரிதா நவாப் என்பவரும், துணைத் தலைவராக திமுக-வைச் சேர்ந்த சாவித்திரி கடலரசுமூர்த்தி என்பவரும் இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி, திமுக ஆதரவு கவுன்சிலர்கள் 23 பேர் கூட்டாகச் சேர்ந்து, ‘ ‘நகராட்சித் தலைவர் பரிதா நவாப்பின் செயல்பாடுகள் நகரமன்றத்துக்கும், அரசுக்கும் எதிராக இருக்கிறது. அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர விரும்புகிறோம்’’ எனக்கூறி, நகராட்சி ஆணையர் சதீஷ்குமாரிடம் புகார் மனு அளித்தனர்.