நள்ளிரவில் கைது செய்யும் போது அந்த தாய்மார்களிடையே ஏற்பட்ட உள்ள கொந்தளிப்பும், அவர்கள் கண்களில் வழிந்த கண்ணீரும் பார்க்கையில்... நெஞ்சை பதைபதைக்க வைத்தது. தாய்மார்களின் கதறலை பொருட்படுத்தாமல் குண்டுக்கட்டாக அவர்கள் தூக்கி செல்லப்பட்ட போதும், சிலர் மயங்கி விழுந்து ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட போதும் என்னையும் அறியாமல் உள்ளம் துடித்து அழுகை பீறிட்டது.
இந்த போராட்டத்தின் இறுதி நிகழ்வை பெரும்பாலான காட்சி ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த போதிலும், சமூக ஊடகங்களில் பல தோழர்கள் நேரலை செய்தனர். இந்த போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை தந்ததற்காக தோழர்கள் வளர்மதியும், நிலவு மொழியும் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது.
எங்கோ ஆந்திராவில் இருக்கும், ஊரை அடித்து உளையில் போடும் ஒரு கார்ப்பரேட் ரெட்டிகாரு சம்பாதித்து கொழுப்பதற்காக, காலம் காலமாக உழைத்த நம் மண்ணின் பெண்கள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் நியாயமா? எத்தனையெத்தனை வழிமுறைகளில் டாஸ்மாக், குவாரிகள், பொதுப் பணித் துறை மற்றும் சாலை பணிகள் ஆகியவற்றில் சம்பாதித்து கொள்கிறீர்களே போதாதா? இந்த ஏழைகளை ஒட்டுமொத்தமாக ஒப்பந்ததாரருக்கு விற்று கமிஷன் பார்த்து காசு பார்க்காவிட்டால், என்ன குறைந்துவிடப் போகிறீர்கள்.?