தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ம் தேதி திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில், திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், டி.ஆர். பாலு, மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 12 பேரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக அண்ணாமலைக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை பொது தளத்தில் இருக்கும் தகவல்களை தான் வெளியிட்டதாகவும், தவறாக எதுவும் கூறவில்லையென தெரிவித்தார். எனவே இந்த பிரச்சனையில் மன்னிப்பு கேட்க முடியாது சட்டப்படி வழக்கை எதிர்கொள்ள தயார் என கூறியிருந்தார். இதனையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், கனிமொழி மற்றும் டிஆர் பாலு ஆகியோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்தி முன்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜூலை 14ஆம் தேதி நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம், வடசென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமர்பிரசாத் ரெட்டி மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய அமர்பிரசாத் ரெட்டி;- பாஜக தலைவர் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு ஒரு வழக்கு தொடுத்துள்ளார். இதுகுறித்து தலைவரிடம் போன் செய்து கேட்ட போது நான் நீதிமன்றத்திற்கு நேரடியாக வந்து சந்திக்கிறேன் என்றார். அண்ணாமலை நீதிமன்ற படியேறினால் டி.ஆர். பாலு தான் அடுத்து சிறை செல்வார். அடுத்த லிஸ்ட்டில் இருப்பது டி.ஆர்.பாலு தான்.
வாட்ச் பில்லு கேட்டதுக்கே செந்தில் பாலாஜிக்கு இந்த நிலைமைனா. அண்ணாமலை கோர்ட்டுக்கெல்லாம் வந்தா டி.ஆர்.பாலு நிலைமைமை யோசித்துப் பாருங்க. வருகின்ற சட்டமன்ற தேர்தலில், இங்கே பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றால் வடசென்னையை சிங்கப்பூர் போன்று மாற்றுவோம் என கூறினார். மேலும், செந்தில் பாலாஜி அதிமுகவில் இருக்கும் பொழுது, அவரை ஊழல்வாதி, கடத்தல் காரன், கொலைகாரன் என பேசிய தற்போதைய முதல்வர், அவர் பேசியதை எல்லாம் மறந்துவிட்டாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.