
பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி 190-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமார் மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார். அதேவேளை ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகா கூட்டணி 50-க்கும் குறைந்த இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 3-5 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலுக்கு, குறிப்பாக வரும் சட்ட மன்றத் தேர்தலில் திமுகவுக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
மகா கூட்டணி தோல்வி காங்கிரஸின் தேசிய பலத்தைக் குறைக்கிறது. இது திமுக கூட்டணியில் வரும் சட்ட மன்றதத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கும் நிலை ஏற்படலாம். இந்தியா கூட்டணியில் பிளவு வராமல், திமுக, காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அப்படி குறைந்த தொகுதிகளை காங்கிரஸ் பெற்றால், காங்கிரஸ், திமுகவை அடிமைப்படுத்துவதாக பாஜக பிரச்சாரம் செய்யலாம்.
பீகாரில் என்.டி.ஏ-வின் பெரும் வெற்றி பாஜகவின் வெற்றிக் கூட்டணி பிரச்சாரத்தை வலுப்படுத்தும். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி 2026-ல் மேலும் உறுதியடையலாம். இது தமிழகத்தில் திமுக கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே உள்ள கூட்டணி கட்சிகளை தக்க வைப்பதோடு, தேமுதிக, பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணியை அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
பீகாரில் வேலை வாய்ப்பின்மை குறித்து ஆளும் கட்சி மீது அதிருப்தி நிலவியது. இளைஞர்கள், பெண்கள், வாக்குகள் அதிருப்தி வாக்குகளாக மாறின. ஜன் சுராஜ் போன்ற புதிய கட்சிகள் இளைஞர் வாக்கைப் பிரித்தன. தமிழகத்தில் வேலையின்மை குற்றச்சாட்டு ஆளும் திமுக மீது20% உள்ளது. திமுக அரசு நான் முதல்வன் திட்டத்தை விரிவாக்கி, வட இந்திய தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
திமுக 2026-ல் திராவிட அடையாளம், சமூக நீதியை வலியுறுத்தி, மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற கொள்கைகளை கடுமையாக எதிர்க்க வேண்டும். பீகார் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு பல பாடங்களை வழங்கியுள்ளது. பீகாரில் என்.டி.ஏவின் வெற்றி தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கை மேலும் பலமாக்கி உள்ளது. இது திமுக கூட்டணிகளை மறுபரிசீலனை செய்யும் முடிவுக்கு நகர்த்தியுள்ளது.
காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின் பலவீனம் திமுகவின் வாக்குகளை பிரிக்கலாம். ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி, பீகார் என தொடர்ச்சியான வெற்றிகள் பாஜகவின் தேசிய ஈர்ப்பை காட்டுகின்றன. தமிழகத்தில் பாஜக-பாமக போன்ற கூட்டணிகள் வலுப்பெறலாம். திமுகவின் பாஜக எதிர்ப்பு முழக்கம் போதாது. சாதி-மத அரசியலையும் சமாளிக்க வேண்டும்.
பீகாரில் உயர் வாக்குப்பதிவு , குறிப்பாக பெண்கள் என்.டி.ஏ-வுக்கு சாதகமாக வாக்களித்தனர். தமிழகத்தில் இளைஞர்கள், பெண்கள் மீதான திமுகவின் கவனத்தை மகளிர் உரிமை தொகை, வேலைவாய்ப்பில் வலுப்படுத்த வேண்டும். ஆனால், திமுக ஆட்சியின் இறுதிக் கட்டம் என்பதால் முன்பே செய்யாமல் அந்த வாய்ப்பை திமுக இழந்து விட்டது. தேஜஸ்வி யாதவின் "மாற்றத்தின் அலை" தோல்வியடைந்தது போல, திமுகவின் அனைவருக்கும் நல்லாட்சி என்ற முழக்கம் தோல்விக்கு வழி வகுக்கலாம்.
பாஜகவின் தொடர் வெற்றி அலை தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. திமுகவுக்கு இது எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. பீகாரில் தேர்தல் பேரணிகளில் பிரதமர் மோடி 'துப்பாக்கி, வன்முறை, சட்ட விரோதம் என ஆர்ஜேடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வரும் காட்டு ராஜ்ஜியத்தை அனுபவிப்பீர்கள் என எச்சரிக்கை விடுத்தார். பீகாரில் மக்கள் மனதில் முழக்கம் அம்மக்களை விழிப்புணரச் செய்தது. தமிழகத்திலும் சட்டம் ஒழுங்கு, போதைப்பொருட்கள் அதிகரிப்பு, வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் இதே பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கலாம்.
பெண் வாக்காளர்களைக் கவர திமுக மகளிர் உரிமைத் தொகை, மகளிர் இலவச பயணம் திட்டங்களை நம்பியுள்ளது. ஆனால் மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் சென்று சேரவில்லை. தகுதியுள்ள மகளிருக்கு எனக்கூறி பலருக்கும் இந்த தொகை மறுக்கப்பட்டதால் பெரும்பாலான பெண்கள் மத்தியில் மகளிர் உரிமை தொகை திட்டம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மகளிர் இலவச பேருந்து திட்டங்களையும் திமுக அமைச்சர்கள் ஓசி பேருந்து என பொதுவெளியில் அவமதித்ததும், பல இடங்களில் இலவச பயணம் செய்யும் மகளிர்கள் பேருந்து ஓட்டுநர், நடத்துனரின் அவமதிப்புகளால் விரக்தியில் உள்ளனர்.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் 125 யூனிட் வரை அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இது மின்சாரக் கட்டணமாக மக்கள் செலுத்த முடியாத கிராமங்களில் ஒரு பெரிய மாற்றமாக அமைந்தது. எங்கள் கிராமத்தில், எருமை கூட மின்விசிறியின் கீழ் தூங்குகிறது” என மக்கள் கொண்டாடினர். ஆனால், திமுக ஆட்சியில் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது போல மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதனால் மின்சாரக் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். மூன்று மடங்கு மின்சாரக்கட்டணம் அதிகரித்துள்ளதாக கடும் அதிருப்தி எழுந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை, அரசு ஊழியர்கள் விவகாரம் போன்றவை திமுகவுக்கு எதிராக கிளம்பி உள்ளன.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் நிர்வாக சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. ஊழல் வழக்குகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், மத்திய-மாநில உறவுகள், பொருளாதார ஏற்ற இறக்கங்கள், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் முக்கிய சவால்களாக உள்ளன. அமைச்சர்கள் மற்றும் கட்சி தலைவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற மத்திய அமைப்புகளின் விசாரணைகள் அதிகரித்துள்ளன. டாஸ்மாக் ஊழல், செந்தில் பாலாஜி ராஜினாமா போன்ற விவகாரங்கள் அரசின் நம்பகத்தன்மையை பாதிக்கின்றன.
கொலை, பாலியல் வன்முறை, போதைப்பொருள் விற்பனை போன்றவை அதிகரித்துள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் மூன்றுமடங்கு உயர்ந்துள்ளன. இது 12 ஆண்டுகளில் குறைந்துள்ளன என அரசு கூறினாலும் 2024-ல் 1,540 கொலைகள், 2025 மார்ச் 19-ல் ஒரே நாளில் 4 கொலைகள்.
வரி உயர்வு, மின்சார விலை உயர்வு, வேலையின்மை, உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல், பென்ஷன் தாமதம், சாலை-கழிவு மேம்பாட்டின்மை.
2025-ல் ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படாதது, அகவிலைப்படி உயர்வு போன்ற அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இத்தனை குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டு திமுக அரசு கவனத்தை திசை திருப்பும் வகையில் மத்திய அரசு மீது தனது குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது.
பீகாரில் மகா கூட்டணி சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு பெரிய தவறைச் செய்தது. அங்கு எதிர்கட்சிகள் எஸ்ஐஆர் பிரச்சினையில் இறுதில் கவனம் செலுத்தினர். ஜூலை மாதம் பாட்னாவின் மையப்பகுதியில் தொழிலதிபர் கோபால் கெம்காவின் கொலை, பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்.டி.ஏ அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தது.
ஆனால் விரைவில், ராகுல் காந்தியின் தலைமையிலான காங்கிரஸ், மாநிலம் முழுவதும் 'வாக்களிக்கும் அதிகார யாத்திரை' மூலம் மகா கூட்டணியின் கவனத்தை எஸ்.ஐ.ஆர் பிரச்சினைக்கு மாற்றியது. தேர்தல்கள் வரும்போது எஸ்.ஐ.ஆர் பிரச்சினை மொத்த பிரச்சினைகளையும் மறைத்து விட்டது. தேர்தலில் வாக்கு பொத்தானை அழுத்த வேண்டிய நேரம் வந்தபோது 'வாக்களிக்கு திருட்டு' குற்றச்சாட்டு விவகாரம் வாக்காளர்களிடையே எடுபடவில்லை. பின்னோக்கிப் பார்த்தால், என்.டி.ஏ ஆட்சியின் கீழ் நடந்ததாகக் கூறப்படும் சட்டவிரோதத்திலிருந்து எஸ்.ஐ.ஆர் பிரச்சினைக்கு தனது கவனத்தைத் திருப்பியது மகா கூட்டணியின் ஒரு பெரியத் தவறு.
தமிழத்திலும் அதே பாணியை கையில் எடுத்துள்ளது திமுக கூட்டணி. பீகாரில் எஸ்.ஐ.ஆரின் குற்றச்சாட்டுகள் எடுபடவில்லை. அதனை தமிழகதிலும் கிளப்பி மற்ற விவகாரங்களில் இருந்து கவனத்தை திருப்பலாம் என்கிற திட்டம் இங்கும் கை கொடுக்காது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.