தோல்வியிலிருந்து இனி மீளவே முடியாது என்று நினைத்த காங்கிரஸின் கரம் பற்றி, கட்டமைத்து கட்சிக்கு புத்துயிர் அளித்ததே மாநில கட்சிகள் தான். அப்படிப்பட்ட மாநில கட்சிகளுக்காகவாவது ஓடோடி உழைக்க வேண்டிய காங்கிரஸ் கட்சி, வழக்கம் போல் மந்தத்தில் மல்லாந்து படுத்து கொண்டிருப்பது உடனிருக்கும் கட்சிகளை உசுப்பேற்றி இருக்கிறது. மக்களவை தேர்தலுக்கே இப்படி என்றால், மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலில் சொல்லவா வேண்டும்? மாநில கட்சிகள் மாங்கு மாங்கென என உழைத்தால், காங்கிரஸ் கட்சியோ கோஷ்டி அரசியல் செய்து கொண்டிருக்கிறது என்பதே எழுதப்படாத விதி.
காங்கிரஸ் தலைமையின் தொடர் தோல்விகளால் பெருத்த ஏமாற்றத்தில் ஆழ்ந்து போயிருக்கும் கூட்டணி கட்சிகள், பீகார் தேர்தல் முடிவுக்கு பின்னராக முற்றிலுமாக கூட்டணியில் இருந்து கழற்றி விட காரணங்களை தேடிக்கொண்டிருக்கிறது. காங்கிரசை விட்டால் பாஜக தான் சாய்ஸ் எனும்போது அங்கே செல்வதற்கு தயங்கிக் கொண்டிருக்கும் சில கட்சிகள், பல்லைக் கடித்துக்கொண்டு சம்பிரதாயத்திற்கு மட்டுமே இண்டியா கூட்டணியில் நீடிக்கிறது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அதீத நம்பிக்கையில் வழக்கம் போல் ராகுலை தவிர அந்த கட்சியினர் மிதப்பில் சுற்றிக்கொண்டிருந்து நிலையில் உடன் இருந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் மட்டுமே மாய்ந்து மாய்ந்து வேலை செய்து கொண்டிருந்தது.