மக்களவை, மாநிலங்களவையில் திமுக எம்.பி.,க்களின் பலம் பாஜக அரசை எதிர்கொள்ள அவசியம் என காங்கிரஸ் தலைமை நினைக்கிறது. ஆனாலும், ராகுல் காந்திக்கு நெருக்கமான காங்கிரஸ் பொதுச்செயலர் வேணுகோபால் உள்ளிட்ட தமிழக காங்கிரஸ் தலைவர்களில் பலரும், தவெக கூட்டணியை விரும்புகின்றனர். காங்கிரஸ் மேலிட தலைவர்களின் விருப்பத்துடன், அக்கட்சியின் தகவல் பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, கடந்த 5ம் தேதி விஜயை சென்னை, பனையூரில் சந்தித்துப்பேசினார். இந்த சந்திப்பு திமுகலைமயை அதிர்ச்சி அடைய வைத்தது.
இந்நிலையில், தவெக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 50 தொகுதிகளை கொடுக்க தயாராக இருப்பதாக விஜய் தரப்பில் இருந்து ராகுல் காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘தமிழகத்தின் பெரிய கட்சியாக இருந்த அதிமுகவின் நிலை இப்போது மோசமாக உள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், அதிமுக நிலைக்குமா? என்பதே சந்தேகம்தான். இதைப் பயன்படுத்தி, அதிமுக இடத்திற்கு வர பாஜக திட்டமிடுகிறது. இதை தடுத்து, அதிமுக இடத்திற்கு தவெக வர வேண்டும். அப்போது தான் தமிழகத்தில் பாஜக எழுச்சியை தடுக்க முடியும் என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி போன்றோர் நினைக்கின்றனர்.