
தமிழக அரசியலில் 'போயஸ் கார்டன்' என்பது வெறும் கட்டிடம் அல்ல; அது பல தசாப்தங்களாக தமிழகத்தை ஆட்சி செய்த அதிகாரத்தின் அடையாளம். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த இல்லத்தின் அரசியல் வாரிசு யார் என்ற கேள்வி நீண்ட நாட்களாகவே விடை தெரியாமல் இருந்தது. தற்போது, அதிமுகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்தவும், பிரிந்து கிடக்கும் தொண்டர்களை ஒன்றிணைக்கவும் ஜெயலலிதாவின் ரத்த உறவான ஜெ.தீபாவை மீண்டும் களமிறக்க அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக வரும் செய்திகள், தமிழக அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளன.
அதிமுக தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய சவால் வாக்குகள் சிதறுவதுதான். ஒருபுறம் சசிகலா, மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் என அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் மூன்று நான்கு திசைகளில் பிரிந்து கிடக்கின்றன. இந்தச் சூழலில், ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபாவை முன்னிறுத்துவதன் மூலம், "அம்மாவின் உண்மையான வாரிசு எங்களுடன்தான் இருக்கிறார்" என்ற பிம்பத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு உருவாக்க முயல்கிறது. இது சசிகலா மற்றும் ஓபிஎஸ் பக்கம் இருக்கும் தொண்டர்களைத் தங்கள் பக்கம் இழுக்க உதவும் ஒரு ராஜதந்திரமாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அரசியல் நகர்வின் மிக முக்கியமான கட்டம், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் தொகுதியிலேயே ஜெ.தீபாவை அவருக்கு எதிராகக் களம் இறக்குவதுதான். குறிப்பாக போடி அல்லது ஆண்டிப்பட்டி போன்ற தொகுதிகளில் தீபா போட்டியிட்டால், அது ஓபிஎஸ்-க்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கும். தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்-க்கு இருக்கும் செல்வாக்கை உடைக்க, ஜெயலலிதாவின் முகச்சாயல் கொண்ட தீபாவை விடச் சிறந்த வேட்பாளர் யாரும் இருக்க முடியாது என அதிமுக தலைமை கணக்குப் போடுகிறது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான 'இரட்டை இலை' சின்னத்தில் தீபா போட்டியிடும் பட்சத்தில், அது திமுகவின் 'உதயசூரியன்' மற்றும் ஓபிஎஸ் தரப்புக்கு இடையே ஒரு கடும் போட்டியை உருவாக்கும். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் சின்னத்தையும், ரத்த உறவையும் ஒன்றாகப் பார்க்கும்போது, அது தேர்தல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். "அம்மா" என்ற உணர்வுப்பூர்வமான பிம்பத்தை முன்வைத்து தீபா வாக்கு சேகரித்தால், அது ஆளுங்கட்சியான திமுகவுக்கும் சவாலாகவே அமையும்.
தீபாவை போல சசிகலாவும் போயஸ்கார்டனில் உள்ள நிலையில் அவருக்கும் ஒரு அதிகார பதவியை கொடுத்து அவருடைய அதிருப்தியாளர்களை திருப்தி அடைய வைக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. அரசியலில் எதுவும் சாத்தியம் என்பதற்கு ஏற்ப, ஒருகாலத்தில் ஒதுங்கியிருந்த தீபா இப்போது அதிமுகவின் துருப்புச் சீட்டாக மாறியுள்ளார் என கூறும் அரசியல் பிரமுகரகள் போயஸ் கார்டனில் இருந்து மீண்டும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் உருவாகுமா? அல்லது இது ஒரு தேர்தல் கால உத்தியாக மட்டுமே இருக்குமா? என்பது வாக்காளர்களின் கையில் உள்ளது என்கின்றனர். எது எப்படியோ, "போட்ரா வெடிய..!" என்ற தொண்டர்களின் முழக்கம் அதிமுகவிற்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்சியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு சிதறிப்போன அந்தத் 'தாய்வழிப் பாசத்தை' மீண்டும் தீபா மூலம் மீட்டெடுக்க அதிமுக துடிக்கிறது. போயஸ் கார்டனில் இருந்து மீண்டும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் சட்டசபைக்குள் நுழைவாரா? அல்லது இது வெறும் தேர்தல் நேரத்து அரசியல் வியூகமாகவே முற்றுப்பெறுமா? என்பது வாக்காளர்களின் தீர்ப்பில்தான் உள்ளது. அம்மாவின் நிழலில் இருந்து ஒரு புதிய அரசியல் வாரிசு உருவெடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.