
தேர்தல் நேரத்தில் பதவி கொடுப்பதும், கொடுத்த பதவியை பறிப்பதும் பெரும்பாலும் நடப்பதில்லை. ஆனால் கரூரில் செந்தில் பாலாஜியை வீழ்த்த அதிமுக நிர்வாகிகள் பலரது பதவியை பறித்தும், பலருக்கு பதவியை கொடுத்தும் அதிரடி காட்டி வருகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இது கரூர் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அவருக்கு மிகவும் நெருக்கமான அதிமுக மாநில நிர்வாகிகள் இதுகுறித்து கூறுகையில், ‘‘கொங்கு மண்டலத்தில் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எம்எல்ஏவாக இருப்பதால் முக்கியமான கட்சி நிகழ்ச்சிகளிலும், எடப்பாடி பழனிச்சாமியின் பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவருக்கு பக்கத்தில் இவர்களால் அமர முடிகிறது. ஆனால், செந்தில் பாலாஜியை எதிர்த்து கரூரில் தீவிர அரசியல் செய்யும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்எல்ஏவாக இல்லாததால் வேலுமணி, தங்கமணி கிடைக்கும் அந்தஸ்து தனக்கு கிடைக்கவில்லை என வேதனைப்படுகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
அதனால் இந்த முறை நிச்சயம் எம்எல்ஏவாக ஜெயிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார். கடந்த சட்ட மன்றத்தேர்தலில் வெற்றிபெற்று போக்குவரத்து துறை அமைச்சராக பவர்ஃபுல்லாக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் பதவி இல்லாத செந்தில் பாலாஜியிடம் 1000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அப்போதே அப்படி என்றால் தற்போதைய நிலையில் செந்தில் பாலாஜி அசுர பலத்துடன் இருக்கிறார். அவரை எப்படி வீழ்த்துவது என்று தனக்கு நெருங்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து கரூர் தொகுதியில் தனது ராஜதந்திரத்தை பயன்படுத்தி வருகிறார் விஜயபாஸ்கர். அந்த வகையில் சமீபத்தில் கரூர் நகரத்திற்கு பகுதி செயலாளராக இருந்த ஜெயராஜ் என்பவரின் பதவியை பறித்தார். அவருக்கு பதிலாக தாந்தோணி ரவியை தெற்கு நகர செயலாளர் ஆக்கினார்.
இந்த ரவி 4 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவிலிருந்து நீக்கப்பட்ட தாந்தோணியின் முன்னாள் நகராட்சி தலைவர். இவர் கடந்த நவம்பர் 7ஆம் தேதி தான் அதிமுகவில் இணைந்தார். இந்த நிலையில் கட்சியில் சேர்ந்த மூன்றே மாதங்களில் நகர் செயலாளர் பதவியா? என்று கரூர் நகர அதிமுகவினர் கொதித்து விட்டனர். ‘‘தாந்தோணி பகுதியில் அதிக ஓட்டு வாங்குவதற்காகத்தான் ரவியை நகர செயலாளராக நியமித்திருக்கிறேன். செந்தில் பாலாஜி வீழ்த்த வேண்டும் என்றால் இதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் கட்சியினரை கேட்டுக்கொண்டார். அதேபோல் ஒரே ஒன்றியமாக இருந்த கரூர் ஒன்றியத்தை மூன்றாக பிரித்து ஐந்து ஊராட்சிக்கு பதிலாக ஒரு ஒன்றிய செயலாளர் வீதம் கமலக்கண்ணன், தங்கராஜ், கணேசன் ஆகிய மூவரையும் நியமித்துள்ளார்.
கரூர் தொகுதிக்குள் அடங்கும் கரூர் மாநகராட்சி பகுதிகளை ஆறாக பிரித்து 6 நகர செயலாளர்கள், 3 ஒன்றிய செயலாளர்கள், அவர்களுக்கு ஒரு பொறுப்பாளர் என நிர்வாகிகளை நியமித்து பிரச்சாரம் செய்து வருகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த புதிய ராஜதந்திரம் நிச்சயம் கரூர் தொகுதியில் அவருக்கு வெற்றியைத் தேடித் தருமா? என்பது போகப் போகத்தான் தெரியும்’’ என்கின்றனர். இது குறித்து புதிதாக பதவிக்கு வந்திருக்கும் கரூர் தெற்கு நகர செயலாளர் தாந்தோணி ரவி கூறுகையில், ‘‘கடந்த நவம்பர் 7ம் தேதி அதிமுகவில் சேர்ந்த எனக்கு நகர செயலாளர் பதவி கிடைத்தது மகிழ்ச்சி. கடந்த காலங்களில் என் அரசியல் களப்பணியை பார்த்துத்தான் இந்த பொறுப்பை எனக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கி இருக்கிறார். நான் தாந்தோணி நகராட்சி தலைவராக இருந்ததால் என்னுடைய தெற்கு நகர பகுதிகளில் செந்தில் பாலாஜி எடுக்கும் ஓட்டுகளைவிட, அதிமுகவிற்கு அதிக ஓட்டுக்கள் நிச்சயம் வாங்கி காட்டுவேன்’’ என்றார்.
புதிதாக பதவிக்கு வந்திருக்கும் அதிமுக கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கராஜ், ‘‘40,000 வாக்குகள் எனது கிழக்கு ஒன்றிய பகுதிகளில் இருக்கின்றன. இந்தப் பகுதியில் செந்தில் பாலாஜி லீடிங் வாங்கக் கூடாது என்பதற்காக என்னை பொறுப்பாளராக நியமித்து இருக்கிறார்கள். எனக்கு கொடுத்த பொறுப்பை திறம்பட செய்து செந்தில் பாலாஜியை நிச்சயம் வீழ்த்துவேன்’’ என்றார்.
இது குறித்து கரூர் மாநகராட்சி திமுக துணை மேயரும், கரூர் தெற்கு திமுக நகர செயலாளர் தாரணி சரவணன் கூறுகையில்,‘‘செந்தில் பாலாஜியை வீழ்த்த கரூர் தெற்கு நகர செயலாளராக எம்.ஆர்.விஜயபாஸ்கர் நியமித்திருக்கும் தாந்தோணி ரவி நகராட்சி தலைவராக இருந்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெறும் 379 வாக்குகள் மட்டுமே வாங்கியவர், இவரை வைத்துக் கொண்டு செந்தில் பாலாஜியை வீழ்த்துவோம் என விஜயபாஸ்கர் சவால் விடுகிறார். இவர் நியமித்திருக்கும் பொறுப்பாளர்கள் அனைவருமே செல்லாக் காசுகள்.
விஜயபாஸ்கரின் ராஜதந்திரங்கள் அனைத்தும் இந்த தேர்தலில் வீணாகும். எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரே ஒருமுறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், செந்தில் பாலாஜி, கரூர் தொகுதியில் போட்டியிட்ட மூன்று தேர்தல்களிலும் அவரக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார். அதேபோல கடந்த சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்திலும், கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெற வைத்தார். அரசியல் நிலவரம் இப்படி இருக்கும்போது செந்தில் பாலாஜியை, அவரால் கனவில் கூட ஜெயிக்க முடியாது’’ என்றார்.