நம்முடைய உணவுமுறைதான் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்களோ அதன் அடிப்படையில் உங்களுடைய ஆரோக்கியத்தை கணக்கிடலாம். ஏனென்றால் உணவு தான் நம்முடைய வாழ்நாட்களை தீர்மானிக்கிறது. இந்த பதிவில் நீங்கள் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் சில உணவுகளை ஏன் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மைதா மாதிரியான சுத்திகரிக்கப்பட்ட மாவு வகைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். மைதாவில் தான் பெரும்பாலான பேக்கரி உணவு வகைகள் தயார் செய்கிறார்கள். நீங்கள் பிரெட் சாப்பிட்டால் கூட அதை கவனமாக பார்த்து வாங்க வேண்டும். கோதுமை மாவு, பல வகை தானியங்களில் செய்த பிரெட் ஆகியவை சாப்பிடலாம். நிறைவுற்ற கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடக்கூடாது.
பிஸ்கட், குக்கீஸ், சிப்ஸ், பேக்கரி உணவுகளை சுத்திகரிக்கப்பட்ட மாவு, வெள்ளை சர்க்கரை, எண்ணெய் சேர்த்து தான் தயார் செய்வார்கள். இவற்றை நாள்தோறும் உண்பதை தவிர்க்க வேண்டும். இதனால் நம்முடைய உடலில் கொழுப்பு சேரும். உடல் எடையும் அதிகரிக்கும். ரிபைண்ட் எண்ணெய்களில் எந்த சத்தும் கிடைக்காது. அவற்றை பயன்படுத்துவதை தவிருங்கள். இவை தேவையில்லாத கொழுப்பை கொடுக்குமே தவிர உடலுக்கு எந்த நன்மையும் இல்லை. ஆரோக்கியத்திற்கு முற்றிலும் கெடுதல்.
நாம் உண்ணும் ஜாம், ஜெல்லி, ஸ்வீட்ஸ் எல்லாமே வெள்ளை சர்க்கரை கொண்டு செய்யப்படுகிறது. இவற்றில் நல்ல ஊட்டச்சத்துகள் ஒன்றுமில்லை. ஆசைக்கு இதை எப்போதாவது எடுத்து கொள்ளலாம். மற்றபடி, இவற்றை உண்பதற்கு பதிலாக வீட்டில் ஏதேனும் அவல் பொரி, பொட்டு கடலை, அவித்த சுண்டல் போன்றவை தயார் செய்து சாப்பிடலாம். அதுதான் ஆரோக்கியம்.