Pride month: ஜூனில் பிரைட் மாதம் ஏன் கொண்டாடுகிறார்கள்? தன்பால் ஈர்ப்பாளர்களின் கொடியின் அர்த்தம் தெரியுமா?

First Published Jun 1, 2023, 1:09 PM IST

Pride month: உலகம் முழுக்க இருக்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்திக்கும் பிரச்சினைகளை குறித்தும், அவர்களுக்கான சட்ட உரிமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் பிரைட் மாதம் (Pride month) கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீபமாகவே தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்களை வெளிப்படையாக அறிமுகப்படுத்துகிறார்கள். அவர்களுக்கான சுதந்திர வெளியை உணருகிறார்கள். பல வரலாற்று ஆய்வுகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தன்பால் ஈர்ப்பாளர்கள் இருந்ததாகவே கூறுகின்றன. அவர்களை குறித்து பொதுசமூகத்தில் புரிதலை உண்டாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் பிரைட் மாதம் கொண்டாடப்படுகிறது. பிரைட் மாதத்தை முன்னிட்டு சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் பேரணியும் நடைபெறும். 

LGBTQ+ சமூகம் என்றால் என்ன? 

லெஸ்பியன் (Lesbian), கே (Gay), பைசெக்ஸுவல் மற்றும் திருநங்கை/ திருநம்பி (Bisexual and Transgender) ஆகியோரை உள்ளடக்கியது தான் LGBTQ+ சமூகம் ஆகும். வெவ்வேறு பாலின ஈர்ப்புகளை கொண்டவர்கள் சமூகத்தை திரண்டிருப்பதை குறிக்கும் சொல்லே எல்ஜிபிடி கம்யூனிட்டி. 

குற்றம்!! 

ஒரு பால் ஈர்ப்பு அல்லது ஓரினச்சேர்க்கை என்பது பல்வேறு நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 28 நாடுகள் மட்டுமே ஓரினச்சேர்க்கை திருமணங்களில் அங்கீகாரம் செய்கின்றன. ஓரினச்சேர்க்கையாளர்களின் சட்ட உரிமைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிரைட் மாதம் கொண்டாடப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பிரைட் மாதம் கொண்டாடப்பட்டு வந்தாலும் மக்களிடையே இது சார்ந்த புரிதல் முழுமையாக மாறுபடவில்லை. இன்றளவும் ஓரின சேர்க்கையாளர்களை குற்றவாளி போலவே பொதுசமூகம் பார்க்கிறது. 

மனநல பிரச்சனை 

அமெரிக்க போன்ற மேலைநாடுகளில் 1960களில் ஓரின சேர்க்கையை மனநல குறைபாடாக அணுகினர். அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் ஓரின சேர்க்கைக்கு எதிராக தடை விதிக்கப்பட்டது. ஒரு நபரை ஓரின சேர்க்கையாளர் என சந்தேகித்தால் கூட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்கு பாதகம் ஏற்பட்டது. போராட்டங்கள் வெடித்தன. அப்படிதான் ஜூன் மாதம் பிரைட் மாதமாக மாறியது. வருகின்ற ஜூன் 28ஆம் தேதி பிரைட் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டுமின்றி இந்தியா, இங்கிலாந்து, கனடா, பிரேசில், ஆஸ்திரியா, அயர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் ஜூன் மாதத்தை பிரைட் மாதமாகக் குறிப்பிடுகின்றன. 

ஓரினசேர்க்கைக்கு எதிரான சட்டங்கள்:

ஓரின சேர்க்கையை இயற்கைக்கு எதிரான செயலாக கருதி 1870ஆம் ஆண்டு ஆங்கிலேய சட்டங்கள் வகுத்தனர். இதன் அடிப்படையில் இந்தியாவில் ஓரின சேர்க்கைக்கு தடை இருந்தது. 2001 ஆம் ஆண்டு நாஸ் பவுன்டேஷன் என்ற அமைப்பு ஓரின சேர்க்கையாளர்களுக்கு உரிய அங்கீகாரம் தரக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். பல கட்ட விசாரணைக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் ஓரினச்சேர்க்கை குற்றமற்றது என்று உச்சச்நீதிமன்றம் அறிவித்தது. மற்றொரு நல்ல விஷயமாக 2019இல் திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. 

ஓரினசேர்க்கை திருமணங்கள் சட்டப்பூர்வமாக உள்ள நாடுகள்:

கோஸ்டாரிகா (2020), வடக்கு அயர்லாந்து (2019), ஈக்வடார் (2019), தைவான் (2019), ஆஸ்திரியா (2019), ஆஸ்திரேலியா (2017), மால்டா (2017), ஜெர்மனி ( 2017), கொலம்பியா (2016), அமெரிக்கா (2015), கிரீன்லாந்து (2015), அயர்லாந்து (2015), பின்லாந்து (2015), லக்சம்பர்க் (2014), ஸ்காட்லாந்து (2014), இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் (2013), பிரேசில் (2013) , பிரான்ஸ் (2013), நியூசிலாந்து (2013), உருகுவே (2013), டென்மார்க் (2012), அர்ஜென்டினா (2010), போர்ச்சுகல் (2010), ஐஸ்லாந்து (2010), ஸ்வீடன் (2009), நார்வே (2008), தென் ஆப்பிரிக்கா ( 2006), ஸ்பெயின் (2005), கனடா (2005), பெல்ஜியம் (2003), நெதர்லாந்து (2000). 

ஓரினச்சேர்க்கையாளர்களின் கொடி அர்த்தம்: 

ஓரினசேர்க்கையாளர்களின் கொடியின் நிறம் வானவில் போல இருக்கும். இதை ஒற்றுமையின் சின்னமாக கருதுகிறார்கள். இந்த கொடியின் நிறங்கள் எல்ஜிபிடி சமூகத்தில் இருக்கும் பாலினங்களை குறிக்கின்றன. சிவப்பு நிறம் வாழ்க்கையையும், ஆரஞ்ச் நிறம் குணப்படுத்துதலையும், மஞ்சள் நிறம் சூரிய வெளிச்சம், பச்சை இயற்கை, நீலம் அமைதி, ஊதா நிறம் ஆன்மாவையும் குறிக்குமாம். 

click me!